ராமநாதபுரம் மாவட்டம், காரடர்ந்தகுடியைச் சேர்ந்த குரு அனுஸ்ரீ, பரமக்குடி ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக தற்காப்புக் கலையான கராத்தேவில் சிறப்பாகப் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகிறார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் பங்கேற்றுள்ள குரு அனுஸ்ரீ, அகில இந்திய அளவிலான போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மேலும் மாநில அளவில் நான்கு முறை தங்கப் பதக்கம் உட்பட இதுவரை மொத்தம் 33 பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
அவரது சாதனையை பாராட்டி ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் கராத்தே பயிற்சியாளர் சென்சாய் மணிகண்ட பிரபு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து குரு அனுஸ்ரீ கூறுகையில், கராத்தே விளையாட்டையும், தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான கராத்தே வீரர், வீராங்கனைகளின் நலனையும் கருத்தில் கொண்டு, கராத்தேவை மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையமான (SDAT) கீழ் இணைத்து உரிய அங்கீகாரம் வழங்க தமிழக முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் பணிவன்புடன் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தனது சாதனைகளுக்காக தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விருப்பம் தெரிவித்துள்ள குரு அனுஸ்ரீக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு அவரது குடும்பத்தினரும் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கராத்தேவில் 33 பதக்கங்களை வென்று மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவியின் கோரிக்கை நிறைவேற வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

