சென்னை, மணலி:
பெருநகர சென்னை மாநகராட்சி 2-வது மண்டலத்திற்குட்பட்ட மணலி எலந்தனூர் பகுதியில் உள்ள பொதுக் குளத்தை மாநகராட்சி சார்பில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், தனிநபர் ஆக்கிரமிப்பு காரணமாக அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மணலி எலந்தனூர் கிராம சேவா சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சம்பந்தப்பட்ட உதவி பொறியாளரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், குளத்தைச் சுற்றி தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வடமாநிலத் தொழிலாளர்களுக்கு வாடகை வீடுகள் அமைத்துள்ளதாகவும், இதனால் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள், குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஊர் மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் பொதுக் குளத்தை தனிநபர் ஆக்கிரமிப்புக்காக சீரமைக்காமல் பணிகளை நிறுத்தி வைத்திருப்பது ஏற்க முடியாதது என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை முழுமையாக தூர்வாரி கரைகள் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனு காவல்துறையினர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் வழங்கப்பட்டது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, குளத்தை சீரமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று ஊர் மக்கள் வலியுறுத்தினர்.

