இல்லத்தரசிகள் தற்கொலை செய்வதில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 2,821 இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட பெண்களில் 48.9 சதவீதம் பேர் இல்லத்தரசிகள் என பதிவாகியுள்ளது. மேலும், நாட்டில் தற்கொலை செய்துகொண்ட இல்லத்தரசிகளில் 13 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சினைகள், மன அழுத்தம், பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்டவை இந்த துயரச் சம்பவங்களுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. பெண்களின் மனநலம் மற்றும் குடும்ப நலன் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

