சென்னை: மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்டு சென்டர் சார்பில், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை நோபல் ஹார்ட் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை, போரூர் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 10-வது இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளிக்கரணையில் நடைபெற்றது.
பள்ளிக்கரணை மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (27-ந் தேதி) காலை பிரார்த்தனையுடன் முகாம் தொடங்கியது. காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்ற முகாமில் 86 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 49 பேருக்கு இலவச ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டது.
கண் பரிசோதனைக்கு வந்தவர்களில் 53 பேருக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன. பரிசோதனையின் போது கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்படும் 9 பேர் கண்டறியப்பட்டு, மேல்சிகிச்சைக்காக போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், தேவையுள்ளவர்களுக்கு கழுத்து மற்றும் இடுப்புப் பட்டைகள், முழங்கால் காலுறைகள், தைலம், குதிகால் காலுறைகள், வலி நிவாரணி ஸ்பிரே, ஜெல் உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டன.
முகாம் சிறப்பாக நடைபெற மகேந்திரா-குணவந்தி பாகரியா, துணைத்தலைவர்கள் பிரவீன்-நீதா கும்பட், செயலாளர் நரேந்திர காந்தேட், பொருளாளர் வசந்த் பராடியா, உம்மேத் பாப்னா, தீபக் பாகரியா, உத்தம்ஜி கோத்தாரி, உஜாலா பாகரியா, லேஹக், சௌர்யா மற்றும் நாராயணலால் சீர்வி உள்ளிட்டோர் சிறப்பான ஒத்துழைப்பு வழங்கினர்.
மதிய உணவுடன் இலவச கண் சிகிச்சை முகாம் நிறைவடைந்தது.

