இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண வசூலை ஒரு மாத காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இராயபுரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினர் எம்.கே. பாபுசுந்தரம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், சுங்கச்சாவடி கட்டண முறை தொடர்பான வாக்குறுதியும் இடம்பெற்றிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாமல், 2014ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை தொடர்ந்து சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேபோல், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, 60 கிலோமீட்டர் இடைவெளிக்கு அப்பால்தான் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில், அந்த நடைமுறையும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சுங்கச்சாவடி கட்டண உயர்வு காரணமாக லாரி போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதுடன், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளிலும் அதன் தாக்கம் ஏற்படுவதாகவும், இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, சோதனை அடிப்படையில் இந்தியா முழுவதும் ஒரு மாத காலத்திற்கு சுங்கச்சாவடி கட்டண வசூலை நிறுத்தி வைத்து, அதன் மூலம் லாரி வாடகை மற்றும் சரக்குப் போக்குவரத்துச் செலவுகளில் ஏற்படும் மாற்றங்களையும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஏற்படும் தாக்கத்தையும் மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் வலியுறுத்தி, நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலைவாசி குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என முன்னாள் மாமன்ற உறுப்பினர் எம்.கே. பாபுசுந்தரம் தெரிவித்துள்ளார்.

