தேனி: அரசு ஊழியர்களுக்காக தேனி மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில், தேனி மாவட்ட சட்டம்-ஒழுங்கு காவல்துறை கபடி அணி சிறப்பாக விளையாடி முதல் பரிசை வென்றது.
சிறப்பு சார்பு ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தலைமையில் பங்கேற்ற தேனி மாவட்ட சட்டம்-ஒழுங்கு காவல்துறை அணியினர், போட்டியின் பல்வேறு சுற்றுகளில் சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்தனர். இதன்மூலம் வெற்றிக்கோப்பையை கைப்பற்றி காவல்துறைக்கு பெருமை சேர்த்தனர்.
முதல் பரிசு பெற்ற தேனி மாவட்ட காவல்துறை கபடி அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தலா ரூ.3 ஆயிரம் பணமுடிப்பு, தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வருகிற 26 மற்றும் 27-ந்தேதிகளில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பணியில் மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் காவல்துறையினர் தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

