ராமநாதபுரம், அக்டோபர் 23:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வட்டம், தங்கச்சிமடத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், வனத்துறை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வன உயிரினப் புத்தாக்க வளர் மையத்தைத் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மருத்துவர் வி.கே. ராஜீவ் திறந்து வைத்து பார்வையிட்டார்.
வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்துவதோடு, பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கியத்துவம், பறவைகளின் வாழ்வியல், அவற்றின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மையத்தைப் பார்வையிட்ட அமைச்சரிடம், அதன் செயல்பாடுகள், நோக்கங்கள் மற்றும் வன உயிரினப் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வன அலுவலர் விளக்கமளித்தார். மேலும், இனப்பெருக்கத்திற்காக இப்பகுதிக்கு வரும் பறவைகளைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள அரிய வகை உயிரினங்கள் தொடர்பான தகவல்களும் மையத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், மேகமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் ஆனந்த், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான் ஷீ நிகம், உதவி வனப் பாதுகாவலர் கோபிநாத், பள்ளித் தலைமை ஆசிரியை ஐதா எடித் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
வன உயிரினங்களையும் இயற்கைச் சூழலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இம்மையம், மாணவர்களின் சுற்றுச்சூழல் அறிவை மேம்படுத்துவதற்கும், வன உயிரினப் பாதுகாப்பில் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர்: M.N. அன்வர் அலிராமநாதபுரம் மாவட்டம்
V NEWS TAMIL INTERNATIONAL WEBSITE NEWS CHANNEL

