ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடுவதா? மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொழிலாளர் சங்கம் கடும் கண்டனம்!

ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடுவதா? மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொழிலாளர் சங்கம் கடும் கண்டனம்!

சென்னை, திருவொற்றியூர்:

திருவொற்றியூர் மண்டலத்தில் அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நடப்பு மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கெனவே குறைந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வரும் ஏழைத் தொழிலாளர்களுக்கு, கிடைக்க வேண்டிய சொற்ப சம்பளத்தையும் உரிய நேரத்தில் வழங்காமல் காலதாமதம் செய்வது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் செயலாகும் என சென்னை பொது தொழிலாளர் சங்கம் (CITU) கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை பொது தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆர். லோகநாதன், சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அலுவலரின் கவனத்திற்கு முக்கியக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களுக்குக் கிடைக்கும் வெறும் ரூ.300 தினக்கூலியை நம்பியே குடும்பச் செலவுகள், உணவுத் தேவை, குழந்தைகளின் கல்விச் செலவுகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைச் சமாளித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தக் குறைந்தபட்ச ஊதியத்தைக்கூட உரிய காலத்தில் வழங்காமல் இழுத்தடிப்பது ஏழைத் தொழிலாளர்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

“குறைந்த ஊதியத்தில் உழைக்கும் அம்மா உணவக ஊழியர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பளிக்க வேண்டாமா? அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சம்பளத்தைக்கூட உரிய நேரத்தில் வழங்காமல் தாமதப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? ஊழியர்களின் குடும்பங்கள் அன்றாட உணவுக்கும் அத்தியாவசியச் செலவுகளுக்கும் என்ன செய்வார்கள்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், படித்தவர்களும் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களும் ஏழைத் தொழிலாளர்களின் நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், அவர்களின் உழைப்பை அலட்சியப்படுத்தும் வகையிலான அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படுவதை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்! ஏழைத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் சம்பளத் தாமதம் தொடரக் கூடாது. அவர்களின் உழைப்புக்கு உரிய ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்குவதுடன், இனிவரும் மாதங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாத வகையில் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அலுவலரிடம் ஆர். லோகநாதன் வலியுறுத்தியுள்ளார்.

ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகங்களைச் செயல்படுத்தும் ஊழியர்களே தங்களது சம்பளத்திற்காகக் காத்திருக்கும் நிலை ஏற்படுவது வேதனைக்குரியது. ஊழியர்களின் உழைப்புக்கு மதிப்பளித்து, நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்பதே தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கியக் கேள்வியாகும்.

 

— ஆர். லோகநாதன்

சென்னை பொது தொழிலாளர் சங்கம் (CITU)

பட்டினி கிடக்கும் தொழிலாளர்களின் சார்பில்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

Facebook