பசும்பொன் தேவர் குருபூஜை விழா: முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

பசும்பொன் தேவர் குருபூஜை விழா: முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

முதலமைச்சர் வருகை குறித்து உறுதியான தகவல் இல்லை எனக் காவல் கண்காணிப்பாளர் விளக்கம் – போக்குவரத்து ஒழுங்குபடுத்தவும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் நடவடிக்கை

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 64-ஆவது குருபூஜை விழா வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் வருகை தந்து மரியாதை செலுத்த உள்ளதால், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் பணிகளில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் ஈடுபட்டுள்ளன.

 

விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காகப் புதிய சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளைத் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மருத்துவர் வே.க. ராஜீவ், மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

ஆய்வின்போது, விழா நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் வழித்தடங்களை முறையாகச் சீரமைத்து, வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், விழா நடைபெறும் நாட்களில் மழை பெய்யும் சூழல் ஏற்பட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தேவையான இடங்களில் நிழற்குடைகள் அமைக்கவும், பொதுமக்கள் காத்திருக்கும் பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

 

இதனிடையே, தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெளி மாவட்டங்களில் இருந்து விழாவிற்கு வரும் வாகனங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். விழாவிற்கு வரும் வாகனங்கள் காவல்துறையால் அறிவுறுத்தப்படும் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், விழாவின்போது அசம்பாவிதச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் ஆளில்லா வானூர்திகள் மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

 

மேலும், முக்கிய வழித்தடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொதுமக்கள் காவல்துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யா ஷீநிகம், பரமக்குடி சார் ஆட்சியர் மருத்துவர் வினோதினி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனரா எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், முதலமைச்சரின் வருகை தொடர்பாக இதுவரை உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். விழாவிற்கு வருகை தரும் அனைவரும் காவல்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

ராமநாதபுரம் மாவட்டச் செய்தியாளர்: M.N.அன்வர் அலி

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

Facebook