அக்டோபர் 30-ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தம்; கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் என அறிவிப்பு!
ராமநாதபுரம்: கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சிக்கு முரணான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவும், ஊழியர் விரோதப் போக்குகள் கடைப்பிடிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரை மாற்றக் கோரி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் ஊழியர் விரோதப் போக்குகளையும், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் கூறப்படும் அணுகுமுறையையும் கண்டித்து, தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இல. விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர்கள் ஜெயசங்கர், பாலாஜி, மாவட்ட இணைச் செயலாளர்கள் வேல்முருகன், முத்துலதா மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணாராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் மணிகண்டன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன், கங்காதரன் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அப்துல் நஜ்முதீன், மாவட்டத் துணைத் தலைவர்கள் பாலுச்சாமி, களஞ்சியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் திருலோகசந்தர் நன்றியுரை கூறினார்.
பதிவாளரை மாற்ற வேண்டும் – ஊழியர் சங்கம் வலியுறுத்தல்!
ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரை மாற்ற வேண்டும்; கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சிக்கு முரணாக இருப்பதாகக் கூறப்படும் உத்தரவுகளைத் திரும்பப் பெற வேண்டும்; ஊழியர் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், செயலாட்சியர் பணியிட நியமன ஆணைகளை ஏற்கக் கூடாது என்றும், அலுவலகப் பணியாளர்களுக்குச் செயலாட்சியர் பணியிடப் பொறுப்புகளை வழங்கக் கூடாது என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அலுவலக நேரம் முடிந்த மாலை 6 மணிக்குப் பிறகு கூகுள் மீட் கூட்டங்களை நடத்தக் கூடாது என்றும், தரமற்ற நிலையில் வந்த வெங்காயங்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் காசோலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; நல்ல நிலையில் வந்த வெங்காயங்களுக்கு மட்டுமே காசோலை கோரப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அக்டோபர் 30-ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தம்!
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 30.10.2026 அன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனச் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். பதிவாளர் மாற்றப்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகம், ஊழியர்களின் பணிச்சூழல் மற்றும் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள இக்கோரிக்கைகளுக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டச் செய்தியாளர்: M.N. அன்வர் அலி

