கழிவுநீர் தேங்கி பொதுமக்கள் அவதி — காசிமேட்டில் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்!

கழிவுநீர் தேங்கி பொதுமக்கள் அவதி — காசிமேட்டில் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்!

சென்னை காசிமேடு அருகே பூண்டி தங்கம்மாள் கோவில் பகுதியில் குடிசை மாற்று வாரியம் வழங்கிய குடியிருப்பில் கடந்த இரண்டு மாதங்களாக கழிவுநீர் செல்ல வழியின்றி சாலைகளில் ஆங்காங்கே தேங்கி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

 

கழிவுநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளதாகவும், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, காசிமேடு பிரதான சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த காசிமேடு காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

மேலும், சம்பந்தப்பட்ட குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியச் செய்தனர். அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தேங்கியுள்ள கழிவுநீர் பிரச்சினையை உடனடியாக சரிசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

 

அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

 

இரண்டு மாதங்களாக நீடித்து வரும் கழிவுநீர் பிரச்சினைக்கு இனியும் காலதாமதம் செய்யாமல் நிரந்தரத் தீர்வு காண வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்காத வகையில் வடிகால் வசதிகளை முறையாக சீரமைத்து, பொதுமக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர்: வாசு

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook