சென்னை, மே 28:
சென்னை கோடம்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 11 வயது சிறுவனுக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை அளித்ததாக வடபழனி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோடம்பாக்கம் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 11 வயது சிறுவனிடம், மதுபோதையில் இருந்த தலைமைக் காவலர் தவறான முறையில் நடந்து கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை, தலைமைக் காவலரை தாக்கி, அறைக்குள் அடைத்து வைத்துவிட்டு சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானதை தொடர்ந்து தலைமைக் காவலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

