பவானிசாகர் அணை மீன்பிடி உரிமையைத் தனியாருக்கு வழங்க எதிர்ப்பு! பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்கக் காத்திருப்புப் போராட்டம்!

பவானிசாகர் அணை மீன்பிடி உரிமையைத் தனியாருக்கு வழங்க எதிர்ப்பு! பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்கக் காத்திருப்புப் போராட்டம்!

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில், மீன்பிடி உரிமையைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கியுள்ளதாகக் குற்றம்சாட்டி, அதைத் திரும்பப் பெற்று மீண்டும் கூட்டுறவு சங்கத்திற்கே வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று (அக்டோபர் 20) காலை 9 மணி முதல் பவானிசாகர் மீன் வளர்ச்சிக் கழக அலுவலகம் முன்பு மாபெரும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

32.8 டி.எம்.சி. நீர் கொள்ளளவும், சுமார் 78.76 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட பவானிசாகர் அணை, பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கும் நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், காலங்காலமாக அணையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் பாரம்பரிய மீனவர்களின் உரிமையைப் பறிக்கும் வகையில், கூட்டுறவு சங்கத்திடம் இருந்த மீன்பிடி உரிமை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனியாருக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த விவகாரத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை என்றும், முதல் தர மீன் கிலோ ரூ.35-க்கும், இரண்டாம் தர மீன் கிலோ ரூ.27-க்கும் கொள்முதல் செய்யப்படும் நிலையில், பொதுமக்களிடம் கிலோ ரூ.170 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, முதல் தர மீனுக்கு கிலோ ரூ.100, இரண்டாம் தர மீனுக்கு ரூ.80, மூன்றாம் தர மீனுக்கு ரூ.70 என நியாயமான கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

நீண்ட காலமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 100-க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு உரிய அலகு வழங்கி முறைப்படி அங்கீகரிக்க வேண்டும் என்றும், வலை பின்னுதல் மற்றும் வலைகளைப் பராமரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட அறையைப் பங்கு மீனவர்கள் பயன்படுத்த உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், மழை, காற்று உள்ளிட்ட இயற்கைப் பேரிடர் காலங்களில் மீன்பிடிக்கச் செல்ல முடியாத சூழலில் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு எவ்வித முன்னறிவிப்புமின்றி மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட காலத்திற்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மீன்பிடி உரிமையைத் தனியாருக்கு வழங்கும் முடிவை உடனடியாகத் திரும்பப் பெற்று, மீண்டும் கூட்டுறவு சங்கத்திற்கே உரிமையை வழங்க வேண்டும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தக் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

— ஆர். லோகநாதன்

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

Facebook