இந்திய பொம்மலாட்ட அஞ்சல் தலைகளில் வடிவமைப்பு பிழைகள் குறித்து ஆய்வு.

இந்திய பொம்மலாட்ட அஞ்சல் தலைகளில் வடிவமைப்பு பிழைகள் குறித்து ஆய்வு.

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் “இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்பு பிழைகள்” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு திருச்சியில் நடைபெற்றது.

நிகழ்வில் கிளப் செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமையிலான இந்நிகழ்வில் நிறுவனர் நாசர், ஜலால், அன்பழக பாண்டியன், முகமது சுபேர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு சொற்பொழிவாளராக பங்கேற்ற தஞ்சை காசிநாத், அஞ்சல் தலை சேகரிப்பாளர்களின் (Philatelists) நுணுக்கமான ஆய்வு முறைகள் குறித்து விரிவாக விளக்கினார். அவர் பேசுகையில், அஞ்சல் தலைகளில் இடம்பெறும் வடிவமைப்பு, எழுத்து மற்றும் அச்சுப் பிழைகளை ஆராய்வதே பல சேகரிப்பாளர்களின் முக்கிய ஆர்வமாகும் என குறிப்பிட்டார்.

அச்சிடும் செயல்முறையில் ஏற்படும் பல்வேறு பிழைகள்—வண்ண இடமாற்றம், வண்ணம் விடுபடுதல், துளையிடல் பிழை, இரட்டை அச்சு, மங்கலான அச்சு, தவறான வெட்டு உள்ளிட்டவை—சேகரிப்பில் முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் அவர் விளக்கினார்.

அவர் குறிப்பாக, 2026 பிப்ரவரி 13 அன்று இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட “இந்தியாவின் பொம்மலாட்டங்கள்” அஞ்சல் தலைத் தொகுப்பில் இடம்பெற்ற ஒரு வடிவமைப்பு குறைபாடு குறித்து கவனம் ஈர்த்தார். அதில் “ராட் பப்பட் / கத்தி குந்தேய்” அஞ்சல் தலையில் சங்கு மற்றும் கதாயுத நிழல் அமைப்புகள் இயல்பான நிலைப்பாட்டுடன் பொருந்தாமல் இருப்பது கவனிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இது தேசிய அளவிலான அஞ்சல் தலை வெளியீட்டில் தரக் கட்டுப்பாட்டு கவனத்தை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும், கடந்த காலங்களில் ICAR சிற்றேடு திரும்பப் பெறப்பட்ட நிகழ்வுகள் மற்றும் “Auroville International Township” அஞ்சல் தலையில் இடம்பெற்ற எழுத்துப் பிழை போன்ற உதாரணங்களையும் அவர் நினைவூட்டினார். சில பிழைகள் திருத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டாலும், சில பிழைகள் அதேபடி நிலைத்திருப்பதால் அவை இன்று சேகரிப்பாளர்களுக்கு அரிய ஆய்வுப் பொருளாக மாறியுள்ளன என்றும் தெரிவித்தார்.

நிறைவாக, இத்தகைய பிழைகள் அஞ்சல் வரலாற்றில் தனித்துவமான மதிப்பை அளிப்பதோடு, எதிர்கால வெளியீடுகளில் உயர்தர கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டியதையும் நினைவூட்டுகின்றன என அவர் கூறினார்.

முன்னதாக இளம்வழுதி வரவேற்புரை வழங்கினார். முடிவில் சிவகுமார் நன்றி கூறினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook