ரூ.1.70 லட்சம் மோசடி – பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்

ரூ.1.70 லட்சம் மோசடி – பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்

குற்றவாளியிடம் பறிமுதல் செய்த செல்போன் மூலம்

ரூ.1.70 லட்சம் மோசடி – பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்

திருவண்ணாமலை எஸ்பி அதிரடி உத்தரவு.

 

 

 

 

 

கீழ்பென்னாத்தூர், மார்ச் 27: குற்றவாளியிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மூலம் ரூ.1.70 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பெண் உதவி காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ.) கவிதாவை சஸ்பெண்ட் செய்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) சுதாகர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மேக்கலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுரளி. இவர் மளிகைக் கடை நடத்தி வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரது கடையில் ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கீழ்பென்னாத்தூர் போலீசார் சோதனை நடத்தி குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பாலமுரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறைத் தண்டனை காலம் முடிந்த பிறகு கடந்த மாதம் பாலமுரளி வெளியே வந்தார். சிறையில் இருந்த காலத்தில் அவரது செல்போன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பின்னர் செல்போனை பெறுவதற்காக காவல் நிலையத்திற்கு சென்ற பாலமுரளி, அதை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.

அதன்பிறகு தனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது, ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் தொகை ஜிபே (GPay) மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் விசாரித்தபோதும் சரியான பதில் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுரளி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) மற்றும் திருவண்ணாமலை எஸ்பி சுதாகருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதன் பேரில் எஸ்பி சுதாகர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

விசாரணையில், பாலமுரளியின் செல்போனில் இருந்து கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் கவிதா, ரூ.1.70 லட்சத்தை தனது உறவினர் செல்போனுக்கு பணப்பரிமாற்றம் செய்து பின்னர் அந்த பணத்தை பெற்றுக்கொண்டது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து உதவி காவல் ஆய்வாளர் கவிதாவை சஸ்பெண்ட் செய்து எஸ்பி சுதாகர் உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook