சென்னை, ஆக. 4:
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்வதாக மிரட்டி ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக கூறப்படும் வழக்கில், காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) முகமது புகாரி மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில்குமார் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. புகாரில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பதாக அச்சுறுத்தி ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஏற்கனவே காத்திருப்போர் பட்டியலுக்கு (Waiting List) மாற்றப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் முகமது புகாரியை நள்ளிரவில் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சீனிவாசனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் BNS பிரிவு 126(2) (சட்டவிரோதமாக தடுத்து வைத்தல்), BNS பிரிவு 308(2) (மிரட்டி பணம் பறித்தல்), BNS பிரிவு 351(2) (குற்றவியல் மிரட்டல்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மேலும் தொடர்புடைய நபர்கள் உள்ளனரா, பணப் பரிமாற்றம் எவ்வாறு நடைபெற்றது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைது சம்பவம் காவல்துறையிலும், சென்னை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

