உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம்: அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம்: அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சிராப்பள்ளி, ஆக. 3–

உலக சாரணர் ஸ்கார்ஃப் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி பிலாட்டலிக் கிளப் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் துவக்க உரையாற்றினார். நிறுவனர் நாசர், ஜலால், பிரேம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

அஞ்சல் தலை சேகரிப்பாளர் இளம்வழுதி பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதாக தெரிவித்தார். 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி ராபர்ட் பேடன்-பவல் இங்கிலாந்தின் பிரவுன்ஸீ தீவில் முதல் சாரணர் முகாமைத் தொடங்கியதன் நினைவாக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுவதாகவும், சாரணர் ஸ்கார்ஃப் ஒற்றுமை, சேவை, தலைமைத்துவம், நட்பு மற்றும் சாரணர் உறுதிமொழியின் அடையாளமாக விளங்குவதாகவும் கூறினார்.

மேலும், 2007-ஆம் ஆண்டு சாரணர் இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, PostEurop அமைப்பின் EUROPA கருப்பொருளின் கீழ் பல ஐரோப்பிய நாடுகள் நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டதாக தெரிவித்தார். அவற்றில் போர்ச்சுகலின் அசோரஸ் பிராந்தியம் வெளியிட்ட “Europa 100 anos do Escutismo” என்ற நினைவு அஞ்சல் தாளில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற சாரணர் ஸ்கார்ஃப் சிறப்பாக இடம்பெற்றுள்ளதாகவும் விளக்கினார்.

8 அஞ்சல் தலைகளை கொண்ட அந்த மினியேச்சர் தாளில் ஒவ்வொரு அஞ்சல் தலையின் மதிப்பு €0.61 என்றும், மொத்த மதிப்பு €4.88 என்றும் அவர் தெரிவித்தார். மேலும், போர்ச்சுகல் அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ குதிரை வீரன் சின்னம் மற்றும் பார்கோடு தாளில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.

நிகழ்ச்சியில் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் மற்றும் சாரணர் இயக்க ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook