வாலாஜாபேட்டை: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்ட விஜயதசமியை முன்னிட்டு, நாடு முழுவதும் சுயம்சேவகர்களின் சீருடை அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலத்தில் 250-க்கும் மேற்பட்ட சுயம்சேவகர்கள் கலந்து கொண்டனர்.
சட்டங்களை மதித்தல், பொது சொத்துகளைப் பாதுகாத்தல், பொது இடங்களைத் தூய்மையாகப் பராமரித்தல், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுதல், நேர்மையான வாழ்க்கையை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட குடிமைப் பொறுப்புகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றதாக அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய மாற்றங்களைச் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் பின்பற்றினால், இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வாலாஜாபேட்டையில் நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலத்தை சமூக சேவகர் ஸ்ரீ W.R. மகேந்திரவர்மன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தின் நிறைவாக, வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகசாமி சித்தர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு வாலாஜாபேட்டையைச் சேர்ந்த முனைவர் ஸ்ரீ வி. சுரேந்திரன் தலைமை தாங்கினார். வாலாஜாபேட்டை காமராஜர் பூ மார்க்கெட் தலைவர் ஸ்ரீ V. கருணாகரன் மற்றும் சௌராஷ்டிரா சபை செயலாளர் ஸ்ரீ D.R.L. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்.எஸ்.எஸ். வட தமிழகத்தின் குடும்ப நலத்துறை மாநிலச் செயலாளர் ஸ்ரீ ரா. பிரகாஷ் சிறப்புரையாற்றினார். தென்பாரத ஊடகச் செயலாளர் ஸ்ரீராம், கரசேவகர்கள், சமூக ஆர்வலர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

