சென்னை, தண்டையார்பேட்டை:
சென்னை தண்டையார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கமாக செலுத்தி வந்த மின்கட்டணத்தைவிட தற்போது பல மடங்கு அதிகமாக மின்கணக்கு வந்துள்ளதாக கூறி பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “வழக்கமான மின்கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக கணக்கு போடுவது ஏன்?” என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்வு
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வழக்கமாக சுமார் ரூ.4 ஆயிரம் வரை மின்கட்டணம் செலுத்தி வந்த ஒரு வீட்டிற்கு, தற்போது திடீரென ரூ.20 ஆயிரம் மின்கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், சில வீடுகள் பூட்டி இருந்த நிலையிலும் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் மின்கணக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மின்கட்டண உயர்வு குறித்து அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து, தவறான கணக்கீடு இருந்தால் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

