ராமநாதபுரம்:
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000-க்கு மேல் ரொக்கம் எடுத்துச் செல்லப்பட்டால் அது பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை முன்னிட்டு 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாக அவர் தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள 1,514 வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிக்காக 7,267 அரசு பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம், குடிநீர், கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தேர்தல் விதிகளை கண்காணிக்க ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கண்காணிப்பு குழுக்களும் செயல்படும். இதனால் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000-க்கு மேல் ரொக்கம் மற்றும் ரசீது இல்லாமல் ரூ.10,000-க்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் எடுத்துச் சென்றால் அவை பதிவு செய்து பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1950, 1800 425 7092 என்ற கட்டணமில்லா எண்களிலும் அல்லது 04567-221172, 221174, 221179 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்புகொள்ளலாம். மேலும் eVigil செயலியின் மூலம் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்கலாம்.
அரசு கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் பதாகைகள், பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் உள்ளிட்ட சில திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் கூறுகையில், மாவட்டத்தில் அனுமதி பெற்ற 150 துப்பாக்கிகளில் 125 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள துப்பாக்கிகளையும் உரிமையாளர்கள் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார்.

