ராமநாதபுரம், மார்ச் 16–
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அல் கலம் சர்வதேச பள்ளியில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்கி வரும் இந்த பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி, பள்ளி நிறுவனர் ஷேக் அப்துல் காதர் குத்தூஸ் அஸ் காரி அவர்களின் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டது. பள்ளி தாளாளர் அப்துல் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றார். பள்ளி முதல்வர் முகம்மது ரஃபீக், பள்ளி நிறுவனர் அப்துல் குத்தூஸ் அஸ் காரி காணொலி மூலம் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியை அறிவித்தார். பள்ளியின் துணை முதல்வர் அப்துல் ரஷீத் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.
இதனைத் தொடர்ந்து முத்துப்பேட்டை கௌசல்யா கல்லூரி முதல்வர் ஃபாதர் சூசையநாதர், வட்டான்வலசை அம்மன் கோவில் பூசாரி ராஜேந்திரன், ராமநாதபுரம் மிசி அசோசியேட்ஸ் நிறுவனர் ஏ.ஆர்.எம். காதர் மீரான் ஆகியோர் ரமலான் மாதத்தின் சிறப்புகள் குறித்து பேசினர்.
பின்னர் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜமாஅத் நிர்வாகிகள், சமுதாய தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் ஆலிம்கள் கலந்து கொண்டனர். பனைக்குளம், புதுவலசை, அழகன் குளம், பெருங்குளம், ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
அல் கலம் பள்ளிவாசல் ஆலிம் துஆ ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை பள்ளி தாளாளர் அப்துல் ரஹ்மான் (கலம் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ்) ஒருங்கிணைத்தார். பள்ளியின் நிர்வாக மேலாளர் மீரான் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். இஃப்தார் நிகழ்ச்சிக்கான உணவை பைசல் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனத்தினர் தயாரித்து வழங்கினர்.
— ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்
M.N. அன்வர் அலி.

