திருச்சி அகில இந்திய வானொலியின் பண்ணை வானொலி சேவை தொடங்கி அறுபதாம் ஆண்டை நிறைவு செய்ததை முன்னிட்டு, “திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்!” என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வை திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்வில்,
திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர், யோகா ஆசிரியர் விஜயகுமார்,
சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர்,
பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன்,
சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வானொலியின் வரலாற்றுப் பயணம்
நிகழ்வில் உரையாற்றிய விஜயகுமார், வானொலி வரலாற்றை நினைவுகூர்ந்தார்.
1874 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்த Guglielmo Marconi, கம்பிகளின்றி நெடுந்தூர தகவல்களை அனுப்ப மின்காந்த அலைகளைப் பயன்படுத்தலாம் என்பதை இளம் வயதிலேயே கண்டறிந்தார். 1920களில் ரேடியோ மூலம் குரல் ஒலி ஒலிபரப்பும் நடைமுறைக்கு வந்தது.
இந்த கண்டுபிடிப்பின் பயனாக, 1936 ஜூன் 8ஆம் தேதி All India Radio (AIR) உருவாக்கப்பட்டு, இந்தியாவில் ஒலிபரப்பைத் தொடங்கியது. மூன்று ஆண்டுகளில், 1939ஆம் ஆண்டு திருச்சிக்கும் வானொலி சேவை வந்தடைந்தது. இதுவே திருச்சியில் வானொலியின் தொடக்கமாக அமைந்தது.
பசுமைப் புரட்சியும் பண்ணை வானொலியும்
பசுமைப் புரட்சியை விதைக்க அரசு தேர்வு செய்த பத்து அகில இந்திய வானொலி வயல்களில் திருச்சியும் ஒன்றாக இருந்தது.
1966 ஜூன் 7ஆம் தேதி பண்ணை இல்ல (Farm & Home) ஒலிபரப்பு தொடங்கியது. 1970–75 காலகட்டத்தில் இதன் பயன்பாடு உச்சத்தை எட்டியது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் ரேடியோவுடன் வயலுக்குச் சென்ற காலம் அது.
ஆடுதுறை–27 என்ற உயர் விளைச்சல் நெல் வகை, பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்படுவதற்கு வானொலி பெரும் பங்காற்றியது. இதனால் மக்கள் அதனை “ரேடியோ நெல்” என்று அழைத்தனர்.
ஒரே நாளில் 110 நிமிடங்களை பண்ணை இல்ல நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கிய சாதனையும் திருச்சி வானொலிக்கே உரியது.
தொடரும் சேவை – தொடரும் பெருமை
வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல அரசு அமைப்புகளுடன் இணைந்து,
“உழவர்களுக்கு”, “வேளாண் அரங்கம்”, “உழவர் உலகம்” போன்ற நிகழ்ச்சிகள் இன்றும் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
2025ஆம் ஆண்டு, அகில இந்திய வானொலி திருச்சியின் பண்ணை இல்ல ஒலிபரப்பு தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவு பெறுவது, வேளாண்மை மற்றும் கிராமப்புற சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்போடு உழைக்கும் அனைவருக்கும் பெருமை தரும் ஒரு வைர விழா தருணம் என விஜயகுமார் குறிப்பிட்டார்.

