சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த நிலையில் காணப்படும் மின்சார பெட்டிகளும், மூடி இல்லாமல் காணப்படும் மழைநீர் வடிகால்வாய்களும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
மழைக்காலங்களில் சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் நடமாடும் தெருக்களில் இதுபோன்ற ஆபத்தான நிலை நீடிப்பது ஏன் அதிகாரிகளின் கவனத்திற்கு வரவில்லை? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஒருபுறம் “தெருவுக்கு நான்கு கட்சிகள்” என்ற அளவுக்கு அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவ்வப்போது கூட்டம் நடத்துவது, புகைப்படம் எடுப்பது, அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பரபரப்பாக இயங்கும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும், தங்கள் பகுதியில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளை ஏன் கவனிப்பதில்லை? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மக்களுக்காக அரசியல் செய்வதாக கூறும் கட்சிகள், முதலில் மக்களின் தெருக்களை கவனிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒவ்வொரு அரசியல் கட்சியின் மேலிடமும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, அவர்கள் வசிக்கும் மற்றும் செயல்படும் பகுதிகளில் உள்ள மின்சார பெட்டிகள் பாதுகாப்பாக உள்ளனவா, மழைநீர் வடிகால்வாய் மூடிகள் முறையாக பொருத்தப்பட்டுள்ளனவா, சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகள் உள்ளனவா என்பதை தொடர்ந்து கண்காணிக்கச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருவதிலும் அரசியல் கட்சித் தொண்டர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புகைப்படத்திற்காக மட்டும் தெருவுக்கு வரும் அரசியல் செயல்பாடு வேண்டாம்; மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காணும் களப்பணி வேண்டும் என்பதே ஆர்.கே. நகர் பகுதி மக்களின் வலுவான கோரிக்கையாக உள்ளது.
மக்கள் உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ள இப்பிரச்சினைகளை அதிகாரிகளும், அரசியல் கட்சிகளின் மேலிடங்களும் உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

