ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட மீராசாகிப் தெருவில் அமைந்துள்ள அரசு புறம்போக்கு கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மீராசாகிப் தெருவில் சர்வே எண் 221-ல் அமைந்துள்ள அரசு புறம்போக்கு கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அதனை அகற்றக் கோரி பொதுமக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், W.P. எண் 29761/2025-ல் கடந்த 08.08.2025 அன்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட அரசு புறம்போக்கு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களுக்குள் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட நில அளவீட்டில், கால்வாயை ஆக்கிரமித்து சுமார் 18 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கால்வாயின் முழுப் பகுதியிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், மிகக் குறைந்த அளவிலான பகுதிகளை மட்டுமே அகற்றிவிட்டு பணிகள் நிறுத்தப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தற்போது புகார் தெரிவித்துள்ளனர்.
அரசு கால்வாயின் முழுப் பகுதியும் மீட்கப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவு முறையாகவும் முழுமையாகவும் செயல்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் மீண்டும் நேரில் ஆய்வு செய்து, சர்வே எண் 221-ல் உள்ள அரசு புறம்போக்கு கால்வாயின் முழுமையான அளவுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவின்படி எஞ்சியுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி அரசு கால்வாயை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாவட்ட செய்தியாளர்: ஆர்.ஜே. சுரேஷ்குமார்
தொடர்புக்கு: 9150223444

