சென்னை:
வரவிருக்கும் மழைக்காலத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் தேங்கியுள்ள கழிவுகளை ஊழியர்கள் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வடிகால் கால்வாய்களில் இருந்து அள்ளப்படும் கழிவுகள் சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்டு, அப்பகுதிகளில் நடைபாதைகளில் வைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த கழிவுகள் சில நாட்களுக்குப் பிறகு சாக்கு மூட்டைகளில் இருந்து வெளியேறி சாலைகளிலும் நடைபாதைகளிலும் சிதறுவதுடன், கடும் துர்நாற்றமும் வீசுவதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 38-வது வட்டத்தில் இதுபோன்று வைக்கப்பட்டுள்ள கழிவுகளை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றி, பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


