ஒரு சில ஓட்டல்களில் புகார் வந்ததற்காக ஒட்டுமொத்த ஓட்டல்களிலும் காலிஃபிளவர் உணவுகளுக்குத் தடை விதிப்பதா?
திருமலை திருப்பதியில் உள்ள ஓட்டல்களில் காலிஃபிளவர் உணவு வகைகளுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது பொதுமக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
சில ஓட்டல்களில் காலிஃபிளவரில் புழுக்கள் இருந்ததாகத் தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, கோபி ரைஸ், காலிஃபிளவர் பக்கோடா, மஞ்சூரியன் உள்ளிட்ட காலிஃபிளவர் உணவு வகைகளை ஓட்டல்களில் தயாரித்து விற்பனை செய்ய தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், சில ஓட்டல்களில் ஏற்பட்ட தவறுக்காக ஒட்டுமொத்த ஓட்டல்களிலும் காலிஃபிளவர் விற்பனைக்கும், உணவு தயாரிப்புக்கும் தடை விதிப்பது எந்த அளவுக்கு நியாயம்? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஒரு ஓட்டலில் சாப்பாட்டில் கல் கிடைத்தால், “இனி அனைத்து ஓட்டல்களிலும் உணவு விற்பனை செய்யக்கூடாது” என்று உத்தரவிட முடியுமா?
ஒரு பேருந்தில் விபத்து ஏற்பட்டால், “இனி அனைத்து பேருந்துகளையும் இயக்கக் கூடாது” என்று கூற முடியுமா?
அதேபோல், ஒரு சில இடங்களில் ஏற்பட்ட தவறை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்தமாக ஒரு உணவுப் பொருளுக்கே தடை விதிப்பது சரியான தீர்வா?
தவறு செய்த ஓட்டல்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து ஓட்டல்களிலும் தரமான உணவு மற்றும் சுகாதார நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிப்பதே சரியான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
புகார் வந்தால் காரணத்தை ஆராய்ந்து, தவறு நடந்த இடத்தில் நடவடிக்கை எடுப்பதுதான் நிர்வாகத்தின் கடமை.
ஒரு சிலரின் தவறுக்காக அனைவரையும் தண்டிப்பது நியாயமா?
திருமலைக்கு வரும் பக்தர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்கான நடவடிக்கை அறிவியல் ரீதியாகவும், நடைமுறைக்கு ஏற்ற வகையிலும், குறிப்பிட்ட தவறு செய்த நிறுவனங்களை மையப்படுத்தியும் இருக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
“ஒரு இடத்தில் தவறு நடந்தால், ஒட்டுமொத்தமாக தடை விதிப்பதுதான் தீர்வா?” — திருப்பதி நிர்வாகத்திடம் பொதுமக்கள் நேரடி கேள்வி!

