காவல் நிலையங்களுக்கு தங்களது குறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது.
கடந்த காலங்களில் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் சில காவலர்கள் ஏளனமாக பேசுவதும், ஒருமையில் அழைப்பதும், அவர்களின் குறைகளை அலட்சியமாக அணுகுவதும் இருந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காலப்போக்கில் இந்த நிலை ஓரளவு மாறி வந்தாலும், இன்னும் சில இடங்களில் இதுபோன்ற அணுகுமுறை தொடர்வதாக அவர்கள் கூறுகின்றனர்.
காவல் நிலையம் என்பது தங்களது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் நாடி வரும் இடமாகும். குறிப்பாக ஏழை, எளிய மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் தங்களது பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு வரும்போது, அவர்களின் பொருளாதார நிலை, சமூக அந்தஸ்து அல்லது பதவியை கருத்தில் கொள்ளாமல் அனைவரிடமும் ஒரே விதமான மரியாதையுடன் காவல்துறையினர் பேச வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
“காவல் நிலையத்திற்கு வருபவர் யாராக இருந்தாலும், முதலில் அவர் ஒரு பொதுமகன் என்பதை காவல்துறையினர் புரிந்து கொண்டு மரியாதையுடன் அணுக வேண்டும். அவர்களின் பிரச்சினையை பொறுமையாக கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில், அனைத்து காவல் நிலையங்களிலும் மரியாதையான பேச்சு, பொறுமையான அணுகுமுறை மற்றும் சமத்துவமான நடத்தை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

