சிறப்பு காவல்படை கமாண்டன்ட் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு. வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.28 கோடி சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு.

சிறப்பு காவல்படை கமாண்டன்ட் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு. வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.28 கோடி சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு.

கோவை,

தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 4-வது பட்டாலியன் சஸ்பெண்ட் கமாண்டன்ட் செந்தில்குமார், தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.28 கோடி மதிப்பிலான சொத்துகளை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ரெட்டையார்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார், 1997-ஆம் ஆண்டு எஸ்.ஐ.யாக காவல்துறையில் பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று, கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 4-வது பட்டாலியன் கமாண்டன்டாக 2022 முதல் பணியாற்றி வந்தார். கடந்த 2025-ஆம் ஆண்டு பாலியல் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர் பணியாற்றிய காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் கிடைத்தது. இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு ஆவணங்கள் மற்றும் வங்கி தொடர்பான பதிவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், 2022 அக்டோபர் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்களில் வீடு, வீட்டுமனை, வாகனங்கள், தங்க நகைகள் மற்றும் வங்கி முதலீடுகள் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

அவரது சட்டபூர்வ வருமானம் மற்றும் செலவினங்களை ஒப்பிட்டு கணக்கிட்டதில், முறையான வருமான ஆதாரமின்றி தனது பெயரிலும், மனைவி சுதாமதி மற்றும் உறவினர்களின் பெயரிலும் ரூ.1 கோடியே 28 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான சொத்துகளை சேர்த்திருப்பது கண்டறியப்பட்டது. இது அவரது வருமானத்தை விட 126 சதவீதம் அதிகம் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, செந்தில்குமார் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook