போலி பட்டாக்களை ரத்து செய்து, நிலமற்ற ஏழை மக்களுக்கு நிலங்களை வழங்க வலியுறுத்தல்!

போலி பட்டாக்களை ரத்து செய்து, நிலமற்ற ஏழை மக்களுக்கு நிலங்களை வழங்க வலியுறுத்தல்!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி பட்டாக்கள் மூலம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பஞ்சமி நிலங்களை மீட்டு, நிலமற்ற ஏழை, எளிய மக்களுக்கு வழங்க வலியுறுத்தி, பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பத்து ரூபாய் இயக்கத்தின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளரும் சமூக ஆர்வலருமான தர்மேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் வாசுதேவன், மாவட்டத் துணைச் செயலாளர் சுதாகர், வழக்கறிஞர் பிரிவின் மாநிலத் துணைச் செயலாளர் திருமலை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இயக்கத்தின் பொதுச் செயலாளரும் வழக்கறிஞரும் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலருமான டாக்டர் நல்வினை விஸ்வராஜ் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பஞ்சமி நிலங்கள் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றிருந்தால், அவை குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட நிலங்களை அரசு மீட்க வேண்டும் என்றும், அந்த நிலங்களை நிலமற்ற ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், போலி பட்டாக்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பஞ்சமி நிலங்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தவர்கள், அதற்கான பத்திரப் பதிவுகளை மேற்கொண்டவர்கள் மற்றும் பட்டா மாற்றத்திற்குத் துணைபோன அதிகாரிகள் ஆகியோர் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். முறைகேடுகளில் தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் சட்டங்கள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், தவறு செய்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பஞ்சமி நிலங்கள் தொடர்பாக அரசாணை எண் 166 (G.O. Ms. No. 166) மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தொடர்புடைய தீர்ப்புகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசும் வருவாய்த் துறையும் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், “தமிழ்நாடு அரசே! பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடு! வருவாய்த் துறையே! போலி பட்டாக்களை ரத்து செய்!” என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பஞ்சமி நிலங்களை மீட்டு, அவற்றுக்குரிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தின் முக்கியக் கோரிக்கையாக அமைந்தது.

ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர்: ஆர்.ஜே. சுரேஷ்குமார்

தொடர்புக்கு: 9150223444

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook