முன்கூட்டியே கண்டறிவோம்… முழுமையான வாழ்வை நோக்கிப் பயணிப்போம்! — பெண்களுக்கான இலவச மார்பகப் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் சேவைகள் வழங்கல்

முன்கூட்டியே கண்டறிவோம்… முழுமையான வாழ்வை நோக்கிப் பயணிப்போம்! — பெண்களுக்கான இலவச மார்பகப் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் சேவைகள் வழங்கல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா மருத்துவமனை சார்பில், ‘பிங்க் அக்டோபர்’ மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, “மம்மோ வாக் 2026” என்ற மாபெரும் விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது.

“முன்கூட்டியே கண்டறிவோம்… முழுமையான வாழ்வை நோக்கிப் பயணிப்போம்!” என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியத்தையும், பெண்கள் தங்களது உடல்நலத்தில் உரிய அக்கறை செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்தது. “ஆரம்பகாலக் கண்டறிதல் உயிர்களைக் காக்கும்” என்ற விழிப்புணர்வுச் செய்தியை வலியுறுத்தும் வகையில் இந்த நடைப்பயணம் அமைந்தது.

ராமநாதபுரம் அண்ணா சிலை ரவுண்டானா எதிரே அமைந்துள்ள தனியார் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து நடைப்பயணம் தொடங்கியது. அங்கிருந்து பேருந்து நிலையச் சிக்னல், ரோமன் சர்ச் கார்னர் வழியாகச் சென்ற விழிப்புணர்வுப் பயணம், கிருஷ்ணா மருத்துவமனை வழியாகத் தொடர்ந்து ராஜா பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது.

பிங்க் அக்டோபர் விழிப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, பெண்களுக்கான இலவச மார்பகப் பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை சேவைகளையும் கிருஷ்ணா மருத்துவமனை வழங்கி வருகிறது. பெண்கள் தங்களது உடல்நலத்தில் அலட்சியம் காட்டாமல், உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று, தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தகைய முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும்.

இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தில் பெண்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாகப் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நாகராஜன், பிரேமா, விமலா மற்றும் விஜயா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் டினேஷ் முகில் மற்றும் நந்தினி ஆகியோர் தலைமையில் மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். சமூக நலனை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்: M.N. அன்வர் அலி

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

Facebook