ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சி நேரடியாக வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற இப்பயிற்சியில், தீ விபத்துகளின்போது மேற்கொள்ளப்படும் தடுப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் உபகரணங்களின் செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களுக்கு நேரடி செயல்விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டது. அவசர காலங்களில் தீயணைப்பு உபகரணங்களை எவ்வாறு கையாள்வது, மீட்புப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்தும் மாணவர்கள் அறிந்துகொண்டனர்.
இப்பயிற்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்த நடைமுறை அறிவைப் பெற்றனர்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் ராஜசேகர், துணை முதல்வர் முனைவர் பெரோஸ் கான் மற்றும் பேராசிரியர்கள் முனைவர் தவசி லிங்கம், சுரேஷ், சாகுல் ஹமீத், சந்திரசேகரன், சதாம் உசேன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்: M.N. அன்வர் அலி

