திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில், பிரிட்டிஷ் இந்திய அஞ்சல் முத்திரைகளில் காணப்படும் குறியீட்டு எழுத்துகள் மற்றும் இடைநிலை அஞ்சல் முத்திரைகளின் முக்கியத்துவம் குறித்த அஞ்சல் உறை மற்றும் முத்திரை கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தொடக்க உரையாற்றினார். அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் பிரேம்குமார், ஜலால், இளம்வழுதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிறுவனர் நாசர், பிரிட்டிஷ் இந்திய காலத்தைச் சேர்ந்த விக்டோரியா மகாராணியின் உருவம் பொறிக்கப்பட்ட அரை அணா மதிப்பிலான அஞ்சல் உறையை காட்சிப்படுத்தி, அக்கால அஞ்சல் நிர்வாகம் மற்றும் மாகாண அமைப்புகள் குறித்து விளக்கினார்.
மேலும், பிரிட்டிஷ் இந்திய அஞ்சல் முத்திரைகளில் காணப்படும் Q, W, X, Y, Z உள்ளிட்ட ஆங்கில குறியீட்டு எழுத்துகள், அஞ்சல் வட்டம், வரிசைப்படுத்தும் மையம், பணிப்பகுதி மற்றும் அஞ்சல் ஊழியர் குழுவை அடையாளம் காண பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அதேபோல், பழமையான அஞ்சல் உறைகளின் பின்புறத்தில் பதிக்கப்பட்ட Backstamp (இடைநிலை அஞ்சல் முத்திரை) மற்றும் Railway Mail Service (RMS), Travelling Post Office (TPO) குறியீடுகள் மூலம் கடிதம் பயணித்த பாதை, சென்றடைந்த இடங்கள் மற்றும் தேதிகளை அறிய முடியும் என்றும் கூறினார்.
பிரிட்டிஷ் இந்திய கால அஞ்சல் முத்திரைகள் வெறும் மை பதிப்புகள் அல்ல; அவை இந்திய அஞ்சல் வரலாற்றின் முக்கிய ஆவணங்களாக விளங்குகின்றன. இவற்றை ஆராய்வது தபால் தலை சேகரிப்பாளர்கள் மற்றும் அஞ்சல் வரலாற்று ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கண்காட்சியில் அரிய அஞ்சல் உறைகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அஞ்சல் முத்திரைகள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன.

