ஜப்பான் 100 மோன் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு.

ஜப்பான் 100 மோன் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு.

திருச்சி, ஏப். 5–

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஜப்பான் 100 மோன் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கி பேசுகையில், நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் போன்ற பரிமாற்ற ஊடகங்களை சேகரித்தல், அவற்றை ஆய்வு செய்தல் மற்றும் வரலாற்று பின்னணியை ஆராய்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றார். மேலும், நாணயங்களின் உற்பத்தி முறை, உலோகத் தன்மை, அவை பயன்பாட்டில் இருந்த காலத்தின் பொருளாதார மற்றும் சமூக சூழல் குறித்து அறிய இது உதவுகிறது என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், வரலாற்று ஆர்வலர் அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி சிறப்பு உரையாற்றுகையில், டென்போ சூஹோ எனப்படும் 100 மோன் நாணயம் 1835-ஆம் ஆண்டு டோக்குகாவா ஷோகுனேட்டால் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டது என்றார். சதுரத் துளையுடன் கூடிய நீள்வட்ட வடிவில் அமைந்த இந்த வெண்கல நாணயம் சுமார் 20.7 கிராம் எடை கொண்டது என்றும் குறிப்பிட்டார்.

100 மோன் என மதிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் எடை ஒரு 1 மோன் கானேய் சூஹோ நாணயத்தின் எடையை விட சுமார் 5.5 மடங்கு மட்டுமே இருந்ததால் சந்தையில் அதன் மதிப்பு குறைந்து பெரும்பாலும் 96 மோன் மதிப்பில் பரிமாறப்பட்டது. இதனால் பணவீக்கம் ஏற்பட்டது என்றும் தெரிவித்தார்.

இந்த நாணயம் ஹொன்சா (ஈடோ) மற்றும் ஜெனிசா (ஒசாகா) நாணயச்சாலைகளில் தயாரிக்கப்பட்டது. சுமார் 49 மில்லிமீட்டர் நீளமுடைய இந்த நாணயத்தில் “100-க்கு சமம்” எனும் சீன எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது.

சந்தையில் “ஷார்ட்-ஹன்ட்ரட்” எனப்படும் முறையில் 96 நாணயங்கள் கொண்ட சரம் 100 மோனாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். 1835 முதல் 1870 வரை உற்பத்தி செய்யப்பட்ட இந்த நாணயம், நவீன யென் நாணய முறை அறிமுகமான பிறகு 1891-ஆம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

சுமார் 484 மில்லியன் நாணயங்கள் தயாரிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அவை சேகரிப்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, எடோ காலத்தின் பொருளாதார சிக்கல்களை பிரதிபலிக்கும் முக்கிய வரலாற்றுச் சான்றாக விளங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook