ஆவடி, செப்.1–
ஆவடி அருகே விஷப்பூச்சி கடித்ததில் 19 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அடுத்த கண்ணப்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்த சங்கர் (47), தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சர்மிளா (19), அயப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த 29ம் தேதி காலை சர்மிளா எழுந்தபோது உடலில் திடீரென அரிப்பு ஏற்பட்டது. சில நிமிடங்களில் அந்த இடங்களில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு உடல் நலக்குறைவு அதிகரித்து வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார். உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவேற்காடு தனியார் மருத்துவமனை மற்றும் அங்கிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், கடந்த 30ம் தேதி மாலை சர்மிளா உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், சர்மிளா விஷப்பூச்சி கடித்ததில் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். துல்லியமான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

