சென்னையில் நகைக்கடையில் கத்திக்காட்டி கொள்ளையடிக்க முயன்ற பெண் கைது
சென்னை திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பான சம்பவம் இடம்பெற்றது.
திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் 40 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருபவர் தேவராஜ் (65). நேற்று மதியம் அந்தக் கடைக்கு பர்தா அணிந்த நிலையில் வந்த பெண் ஒருவர், நகை வாங்குவது போல் நடித்து, மூன்று சவரன் தங்கச் சங்கிலி, ஒரு சவரன் வளையல், ஒரு சவரன் கம்பல் என மொத்தம் ஐந்து சவரன் நகைகளை தேர்வு செய்தார்.
பணம் கேட்கப்பட்டபோது, கணவர் பணத்தை எடுத்து வருவதாகக் கூறி நேரத்தை கழித்த அந்தப் பெண், திடீரென கத்தியை காட்டி தேவராஜை மிரட்டினார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட தேவராஜின் குடும்பத்தினர் துணிச்சலுடன் அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணையில், கைது செய்யப்பட்டவர் திருவொற்றியூர் காலடிப்பேட்டை மேற்கு மாட வீதியைச் சேர்ந்த ஜெயசித்ரா (44) என்பது தெரியவந்தது.
ஜெயசித்ரா தனது கணவருக்கு தெரியாமல் நான்கு லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்ததாகவும், அதிலிருந்து தப்பிக்க தான் இப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


