திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தீராக்களம் நூல் ஆய்வரங்கம் நிகழ்ச்சி திருச்சி தமிழ் சங்க குளிர்மை சிற்றரங்கில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க சிறப்பு தலைவர் சௌமா ராஜரத்தினம் தலைமை வகித்தார். சங்க துணைத்தலைவர்கள்
பத்மஸ்ரீ சுப்புராமன், சூர்யா சுப்பிரமணியன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முகமது ஷபி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முனைவர் சங்கரி சந்தானம் வாழ்த்துரை வழங்கினார்.
நாவல் என்பது உண்மையின் மாற்று வடிவமாகும் நாவலில் நிஜமும் நினைவும் ஒன்றுக்கொன்று இணைந்து உயிர்ப்புடன் கொண்டு செல்வதாகும் நாவல் இல்லாமல் போயிருந்தால் சரித்திரம் உயிர் துடிப்புடன் இருந்திருக்காது. அந்த வகையிலே தீராக்களம் நாவல் மகத்தான கதாபாத்திரங்களை நாவலாசிரியர் புரட்சிகர இயக்கத்தின் கள செயற்பாட்டாளர் மக்கள் விடுதலைப் பண்பாட்டு பேரியக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாட்டாளி மறக்க முடியாத பல்வேறு தலைமுறை தாண்டிய கதாபாத்திரங்களுடன் மூன்று நூற்றாண்டுகளை எழுத்து வடிவில் எடுத்துரைத்த நாவலாசிரியர் மனதில் தங்கி விடுகிறார். சிவப்பு நிறத்தின் மேல் இரட்டைப் போன்ற கருப்பு நிறத்தில் தீப்பிழம்பாய் தீ எழுத்து சிவப்பாய் இருக்க தீராக் களம் பிற எழுத்துக்கள வெளிச்சத்தை பாச்சும் வகையில் நாவல் அட்டை வடிவமைப்பு அமைந்துள்ளது
தோழர் பாட்டாளியின் “தீராக்களம்” நாவல் 496 பக்கங்கள் கொண்டது. நீண்ட நெடிய கதையில் நான்கு தலைமுறைகளின் வெவ்வேறு போராட்டங்களை,”களம்”வாரியாக பிரித்து, முப்பாட்டன் களத்தின் “கஞ்சமலை” கதாபாத்திரத்தை திருச்சி வட்டாரக் கல்வி அலுவலர் இரா. ஜெயா பாட்டன் கள “தில்லை வாசகன்” கதாபாத்திரத்தை தோழர் இந்திரஜித் அப்பன் கள “முனியாண்டி ” கதா பாத்திரத்தை தனலட்சுமி பாஸ்கரன், பேரன் கள “சிங்கார வேலன்” கதாபாத்திரத்தை ஜவஹர் ஆறுமுகம் உள்ளிட்டோ ஆய்வு உரையாற்றினர்.
தீராக் களம் நாவல் கூறுவது என்னவென்றால், 1802ல் நில வரி வசூல் செய்வதற்காக ‘கர்ணம்’ என்கிற புதிய நிர்வாக அமைப்பினை ஏற்படுத்தியது ஆங்கிலேய அரசு. அதுவரை நில வரி வசூலில் ஈடுபட்டிருந்த ஜமீன்தார்களுக்கு இது பேரிடியாக அமைந்தது. அதேசமயம் ஏற்கனவே ஜமீன்தார்களால் ஒட்டச்சுரண்டப்பட்ட உழவர் பெருங்குடிகள் தற்போது அன்னிய ஆங்கிலேயராலும் மேலும் மேலும் ஒட்டச்சுரண்டப்படும் நிலைக்கு ஆளானார்கள். இந்தக் கொடுமைகளை எதிர்த்து உழவர் பெருங்குடிகளின் நில உரிமைக்கான மிகப்பெரிய போராட்டம் அன்றைய காலகட்டத்தில் நடந்தது. பின் நாட்களில் 1836 முதல் 1919வரை நடைபெற்ற ‘மாப்ளா கலகம்’ என்று வரலாற்றில் அறியப்பெற்ற பெரும் கலகத்தின் தோற்றுவாய் இது. இச்செய்தி வரலாற்றில் வெளிக்கொண்டுவரப்படாமலேயே, பதிவு செய்யப்படாமலேயயே இருந்தது. அதனைத் ‘தீராக்களம்’ நாவல் வரலாற்றில் முதன் முறையாகப் பதிவு செய்துள்ளது. இது முப்பாட்டன் கஞ்சமலையின் களமும் காலமும் ஆகும்.
19ஆம் நூற்றாண்டில், ‘தமிழ் நாடகத் தந்தை’ என்றழைக்கப்படுகிற தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களோடு உடன் பயின்ற நாடகக் கலைஞர், சமஸ்கிருத வேதப் பண்பாட்டை மறுத்து தமிழை, தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களை முன் வைத்த அவருடைய தமிழ்ப் புலமை என்பதெல்லாம் இணைந்ததொரு கலை இலக்கியப் பண்பாட்டு வரலாறு. இது பாட்டன் தில்லை வாசகம் பிள்ளையின் களமும் காலமும் ஆகும்.
1960களில் மதுரை மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர்களின் சுரண்டலுக்கெதிரான, அடிப்படை உரிமைகளுக்கெதிரான தொழிற்சங்கப் போராட்டக் களத்தில் உயிர்பலி வாங்கப்பட்ட தோழர் முனியாண்டி என்கிற அப்பன் காலமும் களமும்.
அடுத்து சிங்காரவேலன் என்கிற பேரனின் காலமும் களமும். 20ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான போராட்டம் இந்தித் திணிப்பு எதிர்ப்பிற்கான பள்ளி, கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள். தமிழ்நாட்டின் முகாமையான இந்தப் போராட்டம் குறித்து ஆய்வு நூல்களும், கட்டுரை நூல்களும் நிறைய வெளிவந்துள்ளது. ஆனால் புனைவிலக்கியத்தில், கலை இலக்கிய வடிவத்தில், இது காறும் உரிய முறையில் பதிவு செய்யப்படவே இல்லை. அதனையும் நிவர்த்தி செய்திடும் வகையில்,
18ஆம் நூற்றாண்டின் உழவர் பெருங்குடிகளின் நில உரிமைப் போராட்டம், 19ஆம் நூற்றாண்டின் கலை இலக்கியப் பண்பாட்டுப் பதிவுகள், 20ஆம் நூற்றாண்டின் மொழிப் போராட்டம். என நிலம், கலை,மொழி ஆகிய களங்களின், மூன்று நூற்றாண்டுகளின் போராட்ட வரலாறுகளின் சங்கமமே ‘தீராக்களம்’ என்கிற இந் நாவல் ஆகும். பாரதி புத்தகாலயம் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. தீராக் களம் நாவலாசிரியர் மக்கள் விடுதலை பண்பாட்டு பேரியக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாட்டாளி ஏற்புரையில் மொழிப்போர் புரட்சியினை நாவலில் எடுத்துரைத்திருக்கின்றேன். பிறந்த இனத்திற்கும் மொழிக்குமான பணியாக தீராக்களம் நாவல் விளங்குகிறது நாவலில் உள்ள கதாபாத்திரங்கனில் மொழிப்போரில் ஈடுபட்டு உள்ளவர்கள் பலர் உள்ளனர் என்றார். மூன்று நூற்றாண்டு கதையினை எழுதிய நாவல் ஆசிரியர் பாட்டாளியை திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சிறப்பு செய்து பாராட்டியது. ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் கவிஞர் ஸ்ரீராம்,கேத்தரின் ஆரோக்கியசாமி, ஆங்கரை பைரவி உள்ளிட்ட திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் எழுத்தாளர்கள் நிகழ்வில் பங்கேற்றனர் முன்னதாக திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்க நிறைவாக நந்தவனம் சந்திரசேகர் நன்றி கூறினார்.

