“தந்தை, மகன் இருவரின் மரணமும் கொலைதான்”

“தந்தை, மகன் இருவரின் மரணமும் கொலைதான்”

சாத்தான்குளம் காவல் மரணம் வழக்கில் 9 போலீசார் குற்றவாளிகள் – நீதிமன்றம் கடும் கண்டனம்

 

 

மதுரை: தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் காவல் மரணம் வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. இருவரின் மரணமும் இயல்பானது அல்ல, காவல் துறையினரின் தாக்குதலால் ஏற்பட்ட கொலை என நீதிமன்றம் உறுதியாக தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், தந்தை மற்றும் மகன் இருவருக்கும் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காவல் துறையினரால் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். காவல் நிலையத்தில் இருந்தபோது இருவரும் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்கு காரணம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் துறை வாகனத்தில் அழைத்துச் செல்லாமல் தனியார் வாகனத்தில் எடுத்துச் சென்றது ஏன்? என்ற கேள்வியையும் நீதிமன்றம் எழுப்பியுள்ளது. சம்பவத்தின் உண்மை நிலையை மறைக்க முயற்சி செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய 9 காவல் துறையினரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்ட 9 பேருக்கும் எந்த வகையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு மற்றும் மாநில அரசு தங்களது கருத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியதுடன், காவல் துறையின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன. பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, நீதி கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்த குடும்பத்தினரும் பொதுமக்களுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

காவல் துறையின் பொறுப்புணர்வை வலியுறுத்தும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மனித உரிமை பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையை உறுதி செய்யும் தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook