அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கோவில் தேரை திருப்ப, நிறுத்த உதவும் முட்டுக்கட்டை குறித்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் ரமேஷ், பாலாஜி ,சிவசுப்பிரமணியன், சங்கரராமன், குகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் கோவில் தேரை திருப்ப நிறுத்த உதவும் முட்டுக்கட்டை குறித்து பேசுகையில், தேர் என்பது பொதுவாக கோயில்களில் கடவுள் உருவங்களை சிற்பங்களை ஊர்வலம் எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் ஓர் ஊர்தியாகும். இத்தேரை திருவிழா நாட்களில் பக்தர்கள் ஊர்வலமாக வடம் பிடித்து இழுத்துச் செல்வர். இதன் பீடம் மரத்தால் ஆனது. இது முழுவதும் மரச்சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இது இந்து மதத்தில் மட்டுமில்லாமல், பவுத்தம் போன்ற மதங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் புத்த சமயக் கடவுளான அருகனுக்குத் தேர் இருந்ததாகக் குறிப்பு இடம் பெற்றுள்ளது. எனவே கோயில் தேர் என்பது பவுத்த, சமண சமயங்களுக்கு உரியதாக இருந்து இந்து சமயத்திலும் அது பின்பற்றப்பட்டு வந்துள்ளதாகக் கருதலாம்.சங்க இலக்கியத்தில் தேர்கள்
மரங்களை வைத்துத் தேர் செய்யும் மரபு தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்துள்ளது. மரத் தேர்களின் அடிப்படையில் தான் கற்தேர்கள் என்னும் ஒற்றைக்கல் ரதங்கள், பல்லவர்களால் மாமல்ல புரத்திலும், பாண்டியர்களால் கழுகு மலையிலும் அமைக்கப்பட்டன. இருப்பினும் பழங்காலத்தில் அமைக்கப்பட்ட தேர்களைக் காண முடியவில்லை. இருப்பினும் சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தேர்கள் அக்காலத்தில் இருந்தமைக்கான செய்திகள் உள்ளன. அவை நெடுந்தேர், பொற்றேர், கொடிஞ்சி நெடுந்தேர், கொடித்தேர், அணிகொள்தேர் என்று பலவகையான பெயர்கள் தேர்களுக்கு வழங்கப்பட்டன. சிலப்பதிகாரம் புத்தக் கடவுளுக்கு என்று தேர்த்திருவிழா நடைபெற்றதைக் குறிப்பிடுகிறது.
தற்போது பெரும்பான்மையான கோயில்களில் தேர்கள் உள்ளன. அவை இடைக் காலத்திலிருந்து இன்றுவரை செய்து வைக்கப்பட்டவையாகும். பல கோயில்களின் தேர்கள் விசயநகர நாயக்கர் ஆட்சிக் காலத்தில் செய்விக்கப்பட்டவை ஆகும். திருவிழாக் காலங்களில் இறையுருவங்களை வீதிகளுக்கு எடுத்துச் செல்லவே கோயில் போன்ற அமைப்புடைய இத்தேர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அக்காலத்தில் அரசனுக்கு இருந்த நான்கு வகைப் படைகளான தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்பனவற்றுள் தேர்ப்படை முதலாவது இடத்தில் வைக்கப்பட்டது. போர்களில் தேர் இன்றியமையாத பங்கு வகித்துள்ளது.தேர்கள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கனமான சக்கரங்களைக் கொண்டவையாகும். இவற்றின் மூன்று பக்கங்களிலும் இறையுருவங்களும், புராணக்கதைத் தொகுதிகளைக் காட்டும் சிற்பத் தொகுதிகளும், மிருகங்கள், செடி கொடிகள் ஆகியவற்றின் உருவங்களும், ஆங்காங்கே பக்தர்கள் மற்றும் கொடையாளிகளின் உருவங்களும் செதுக்கப் பட்டிருப்பதைக் காணலாம். திருவிழாக் காலங்களில் அவற்றின் மீது எண்ணெய் பூசுவதால் இச்சிற்பங்கள் அழகாகக் கற்சிற்பங்கள் போன்று கருமை நிறத்தில் காட்சியளிக்கும். தேரின் அமைப்பைப் பொறுத்தவரை அது கோயில் விமானத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பதாகவே அமைகிறது. இத்தேர் சதுரம், அறுகோணம், பதின்கோணம், பன்னிரண்டுகோணம், வட்டம், நீள்வட்டம், நீள் சதுரம், எண்கோணம், முட்டை வடிவம் என ஒன்பது வகைகளில் அமைக்கப்படுகிறது.தேர்களில் புராணக்கதை தொடர்பான சிற்பங்கள், குறிப்பாக சைவக் கோயில் எனில் சைவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும், வைணவக் கோயில் எனில் வைணவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும் பெரும்பாலும் செதுக்கப்பட்டுள்ளன. சில தேர்களில் சைவம், வைணவம் எனும் இரண்டு சமயம் தொடர்பான சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.தமிழகத்துத் தேர்களில் முக்கியத் தட்டுகளில் உள்ள சிற்பங்கள் எட்டு அங்குலம் முதல் இரண்டரை அடி உயரமுள்ளனவாக அமைந்திருக்கும். சிற்றுருச் சிற்பங்கள் ஆறு அங்குலம் உயரம் உடையனவாகும். தேரின் அச்சுப் பகுதியில் கணபதி, முருகன், பூத கணங்கள் ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தேர்களின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றனர். தேர்களில் அதிட்டானப் பகுதிகளில் இந்து சமயத் தொன்மக் கதைகளும், மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைச் சித்திரிக்கும் செய்திகளும், சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும். தேரின் பீடத்தில் நாட்டியப் பெண்கள், இசைக் கருவிகளை மீட்டுவோர், அட்டதிக் பாலகர்கள், கஜலட்சுமி ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், வடுகர்பேட்டை எனும் ஊரிலுள்ள கிறித்தவ தேவாலயத்திற்கான தேரில் இயேசு பெருமான் வாழ்க்கையை விவரிக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.[5]
தேர்த் திருவிழா என்பது பலதரப்பட்ட மக்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. ஊர்கூடித் தேர் இழுத்தால் தான் தேர்த் திருவிழாவினைக் கொண்டாட முடியும். இது ஒற்றுமையை மறைமுகமாக வலியுறுத்தும் விழா என்று கூட கொள்ளலாம். அலங்கரிக்கப்பட்ட தேர் தேரின் உயரம் சுமார் 30 முதல் 96 அடியாகும். மொத்த எடை பல டன் ஆகும்.
இந்த நிலையில் தேரை திருப்புவதற்கும் நிறுத்துவதற்கும் உதவும் முட்டுக்கட்டை முக்கியமானது ஆகும். முட்டுக்கட்டைக்கான கைப்பிடியுடன் கூடியது.சிறிய தேரை காட்டிலும் பெரிய தேருக்கு அதிக முட்டுக்கட்டைகள் தேவைப்படும். முட்டுக்கட்டைகள் புளிய மரத்தில் செய்யப்படும். தேரை இழுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. சம்பிரதாயமான தேருக்கு ஸ்டியரிங் வீல் கிடையாது. சாலைகளில் சுற்றி அங்கும் இங்குமாக நகர்த்தி ஓட்டவேண்டும். ஆங்காங்கு நிறுத்த வேண்டும். பின் மீண்டும் சக்கரங்களை நகர்த்த வேண்டும். வீதிகளில் திருப்புவதற்கு உதவியாக முட்டுக்கட்டை பயன்படுகிறது. இதை உந்துகட்டை என்றும் சொல்வார்கள். தேரின் வெளிப்பக்கத்தில் இருந்தும், உள்பக்கத்தில் இருந்தும் முட்டுக்கட்டை போடுவார்கள். உள்ளிருந்து முட்டுக்கட்டை போடுபவரின் பணி மிகவும் சிரமமானது. சிறிது தவறானாலும் சக்கரத்தின் அடியில் சிக்கி கை நசுங்கிப்போகலாம். பெரிய தேராக இருந்தால் ஆளே நசுங்கி உயிரிழப்பு ஏற்படலாம். நின்று கொண்டிருக்கும் தேரை சாதாரணமாக பிடித்து இழுத்து நகர்த்துவது கடினம். ஒரு முட்டுக்கட்டை 40 கிலோ எடையில் 2 அடி நீளம், 1 அடி அகலம், 1.5 அடி உயரத்தில் இருக்கும். தேரை நகர்த்துவதற்கு தேர் சக்கரத்தின் அடியில் கட்டையை கொடுப்பார்கள். அப்போது சக்கரம் முன்நோக்கி உருளும். அதற்கு பின்னர் தேரை இழுக்கும் இழுவையில் தேர் ஓடும் என்றார்.

