வளரி  குறித்த சிறப்பு சொற்பொழிவு

வளரி குறித்த சிறப்பு சொற்பொழிவு

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் வளரி குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் ரமேஷ், பாலாஜி ,சிவசுப்பிரமணியன், சங்கரராமன், குகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வளரி குறித்து பேசுகையில், வளரி என்பது பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை ஆயுதம் ஆகும். இவ்வாயுதம்‌ தாங்கிய படை எரிபடை என சோழர்‌ காலக்‌ கல்வெட்டுகள்‌ குறிப்பிடுகின்றன. ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை இந்த ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவர்க்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும். ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.

வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும்.பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும். வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமான இது பண்டைய போர் வகைகளிலும் பயன் படுத்தப்பட்டிருக்கிறது.தமிழ்நாட்டில் சிவகங்கை, தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், அவர்களது படைத்தளபதி வைத்திலிங்க தொண்டைமான் வளரியையே ஆயுதமாகப் பயன்படுத்தி ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.

1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் வளரி ஆயுதத்தை வைத்திருப்பதற்கும் மற்றும் பயன்படுத்தவும் தடை விதித்தார்கள். இதனால் வளரியின் பயன்பாடு மறைந்து போனது. நடுகற்களிலும் மற்றும் சாமி காணிக்கையாகவும் வழங்கிய வளரி ஆயுதம் மட்டுமே இன்று காணப்படுகின்றது.கள்ளழகர் கோயிலில் இருந்து மதுரை நோக்கி கிளம்பும் பெருமாள், ஒரு கையில் வளரித்தடி என்ற ஆயுதத்தை வைத்துள்ளார், இதையே கள்ளர் திருக்கோலத் தோற்றம் என்கிறார்கள்.

சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல் என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ) கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது.

பெரிய மருது ஓடுகின்ற முயலை கூட வளரி கம்பால் அடித்து விடுவார் என்று மேஜர் ஜேம்ஸ் வெல்ஷ் மருதுவின் வளரி வீசும் திறமையைப் பாராட்டி வியந்து கூறியுள்ளார். அதே போல ஜேம்ஸ் வெல்ஷ் சின்ன மருது , தனக்கு வளரி எறிவதைக் கற்றுக்கொடுத்ததாக ராணுவ நினைவுகள் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். துப்பாக்கி, பீரங்கி என்று நவீன ஆயுதங்களை வைத்திருந்த ஆங்கிலேயர் வளரியைக் கண்டு அஞ்சி நடுங்கினா். இந்த போராட்டத்தை நினைவுகூரும் வகையிலான நினைவுச் சின்னம் பெருங்காமநல்லூரில் எழுப்பப்பட்டுள்ளது என்றார்.

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook