திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் ஏற்பாடு – பண்டைய பல்லவ வரலாற்றை விளக்கிய நாணயவியல் கருத்தரங்கு
திருச்சி:
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தின் சார்பில் சிம்மவிஷ்ணு பல்லவ நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர்–தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்ககால நாணய சேகரிப்பாளர்கள் பாண்டியன், முகமது ஜுபைர், அசோக் காந்தி, ஹீராலால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கிருஷ்ணகிரி சங்ககால நாணய சேகரிப்பாளர் மதன், சிம்மவிஷ்ணு பல்லவர்களின் வரலாறு மற்றும் நாணய அமைப்பை விரிவாக விளக்கினார். அவர் கூறியதாவது: தென்னிந்தியாவில் காஞ்சிபுரம் தாண்டி ஆட்சி பரப்பை விரிவுபடுத்திய முதல் பல்லவ மன்னர் சிம்மவிஷ்ணு ஆவார். பல்லவர்களின் மறுமலர்ச்சிக் காலத்திற்கு துணை நின்ற முக்கிய மன்னரான இவர், கலை, கட்டிடக்கலை மற்றும் நாணய வரலாற்றில் தனித்துவமான பங்களிப்பை வழங்கியவர் என்றும் அவர் தெரிவித்தார்.
திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடைவரை கோயில்கள் பல்லவர்களின் கலைப்பணிகளை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக லலிதாங்குரா பல்லவேஸ்வர கிரஹம் (மேல் குகைக் கோயில்) மற்றும் மகேந்திரவர்மன் முதலாம் காலத்து (7ஆம் நூற்றாண்டு) செதுக்கப்பட்ட குகைகளில் சைவர்–வைணவர் மரபுகளின் கலந்த பண்பாட்டு தாக்கத்தைக் காணலாம் என மதன் குறிப்பிட்டார்.
சிம்மவிஷ்ணு பல்லவர்களின் நாணய அமைப்பை பற்றி அவர் மேலும் விளக்குகையில்: பல்லவர்கள் வெளியிட்ட கலப்பு உலோக நாணயம் மிக முக்கியமானது. அதன் முன்பக்கத்தில் வலதுபுறம் நோக்கி நிற்கும் சிங்கம் பல்லவர்களின் வலிமை மற்றும் சிம்மவிஷ்ணுவின் ஆட்சிச் சின்னமாகும். பின்பக்கத்தில் சங்கு வடிவம் அதன் சுற்று பரவி ஓடும் கோடுகளுடன் காணப்படுவது, பல்லவர்களின் வைணவ மரபு மற்றும் அடையாளச் சின்னங்களைக் குறிக்கும் என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சென்னை பூபதி, சேலம் பூபதி, பொள்ளாச்சி மணிகண்ட பிரபு, முகமது பைசல், துறையூர் பெரியசாமி, தஞ்சை முகமது மீரான், முகமது யூசுப், தாமோதரன் உள்ளிட்ட பல நாணய சேகரிப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

