கமலை  பாசனம் குறித்த சிறப்பு சொற்பொழிவு

கமலை பாசனம் குறித்த சிறப்பு சொற்பொழிவு

திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம் வைத்துள்ளார்கள்.

 

புழங்கு பொருட்கள் காட்சியகத்தை திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத் தலைவர் தோழர் இந்திரஜித் எழுத்தாளர்கள் ரமேஷ் பாலாஜி சிவசுப்பிரமணியன் சங்கரராமன் குகநாதன் உள்ளிட்டோர் பார்வையிட்டு கமலை பாசனம் குறித்து கேட்டறிந்தனர்.

 

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் கமலை குறித்து பேசுகையில்,

 

பழங்காலத் தமிழர் நீர் இறைக்கும் முறைக்கு கமலை இறைத்தல் என்பர்.மின்சாரத்தால் இயங்கும் நீர் இறவை யந்திரம் அறிமுகமாகும் முன்னர் வேளாண்மைத் தொழிலுக்குத் தேவைப்படும் அதிக அளவிலான தண்ணீரைக் கிணறுகளில் இருந்து இறைக்கப் பயன்பட்ட கருவி கமலை ஆகும்.இரண்டு மாடுகளின் துணையுடன் கமலையால் நீர் இறைப்பர். இது நம் பாரம்பரியத் தொழில்நுட்பத்தின் அடையாளம் ஆகும். கிணற்றினுள் நீரை முகக்க அகன்ற அண்டா போன்ற அமைப்புடைய கலன் பயன்பட்டது. இந்த உலோகம் பெரும்பாலும் துத்தநாகத் தகடு அல்லது தோலால் செய்யப்பட்டிருக்கும். இதுவே ‘பறி’ என்று கொங்குப் பகுதி யிலும், ‘கூனை’ என்று தென்மாவட்டங்களிலும் அழைக்கப்பட்டது. தோலால் ஆன பறியே கொங்குப் பகுதியில் பரவலாக வழக்கில் இருந்துள்ளது. பறியின் அடிப்பகுதியானது வாய்ப்பகுதியைவிடச் சிறிய அளவிலான துவாரத்தைக் கொண்டிருக்கும். இதன் வழியாகவே பறியிலுள்ள நீர் வெளியேறும். நீருடன் கிணற்றில் இருந்து மேலே வரும் பறியில் உள்ள தண்ணீர் கிணற்றுள் விழுவதைத் தவிர்க்கவும், கிணற்றின் தொட்டியில் அது முழுமையாக விழவும் ‘தும்பி’என்ற பெயரிலான தோலால் செய்யப்பட்ட உறுப்பு பறியின் அடிப்பகுதியில் பொருத்தப் பட்டிருக்கும். தென்மாவட்டங்களில் இதை வால் என்பர். இதன் வாய்ப்பகுதியும் அடிப்பகுதியும் மேலும் கீழும் தைக்கப்படாத நீண்ட பை போன்று இருக்கும். தண்ணீருடன் கூடிய பறியைக் மாடுகள் உயரே இழுக்கும்போது தும்பியின் வழியாக நீர் கொட்டுவதைத் தடுக்க அதன் அடிப்பகுதியின் இரு முனைகளிலும் கயிறு கட்டுவர். இக்கயிறு தும்பி மேலே வந்தவுடன் தளரும் வகையிலும் கிணற்றிலிருந்து மேலே வரும்போது தும்பியின் அடிப் பகுதியை இறுக்கும் வகையிலும் கட்டப்பட்டிருக்கும்.

இக்கயிறு ‘தும்பிக்கயிறு’என்று கொங்கு வட்டாரத்திலும்,‘வாலக்கயிறு’என்று தென்மாவட்டங்களிலும் அழைக்கப்படும். இக்கயிறு கட்ட தும்பியின் அடிப்பகுதியின் இரு முனைகளிலும் துவாரம் இருக்கும். இது தும்பிக்காது எனப்படும். தோலால் ஆன பறியில்,அதன் அடிப்பகுதியுடன் தும்பியானது இணைத்துத் தைக்கப்பட்டிருக்கும். இதனால் உலோகத்தாலான பறியில் தும்பியை இணைத்துக் கட்டுவதுபோல் கட்டவேண்டிய அவசியமில்லை. தொடர்ச்சியாகப் பறியைப் பயன் படுத்துவதால், பறியிலும், தும்பியிலும் சிறு பொத்தல்கள் ஏற்படுவதுண்டு. இவற்றின் வாயிலாக நீர் சிந்தி வீணாவதைத் தடுக்க, ‘பற்றாசு’ என்ற பெயரிலான துண்டுத்தோல்களைப் பயன் படுத்தித் தைப்பது அவசியமான ஒன்றாகும். கமலையின் முக்கிய உறுப்புகளான பறியும் தும்பியும் தோலால் செய்யப்படுவதால் இவற்றை உருவாக்குவதிலும் பழுதுபார்ப்பதிலும் தோல் தொழிலாளர்களின் பணி தவிர்க்க முடியாத ஒன்றாகும். பறி தொடர்பான தொழில் நுட்பத்தில் இவர்கள் மட்டுமே வல்லவர்களாய் இருந்தனர் என்றார்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook