சென்னை: சர்வதேச அளவில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் தங்கத்தை விட வெள்ளி அதிக மதிப்புடையதாக இருக்கும் என பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக வெள்ளி கிலோ ரூ. 1 லட்சத்தை தாண்டியது. இந்த விலை உயர்வு வரலாற்று திருப்பமாக பார்க்கப்படுகிறது. வேதாந்தா குழுமத்தின் தலைவரான அணில் அகர்வால் இது குறித்து கூறுகையில், “டாலர் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக வெள்ளியின் விலை கணிசமாக உயரும். தொழில்துறை வளர்ச்சி வேகம் எடுத்து இருப்பதால் வெள்ளியின் பயன்பாடும் தேவையும் முன் எப்போதும் விட அதிகரித்திருக்கிறது.
இந்தியாவில் வெள்ளியின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக சூரிய மின் தகடுகள், மின்சார வாகனங்கள், சுகாதாரத்துறை, மின்னணுவியல் உட்பட பல தொழில்நுட்பங்களில் வெள்ளியின் தேவை அதிகரித்து இருக்கிறது. எனவே எதிர்காலத்தில் இது முக்கியமாக உலோகமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
DSP மியூச்சுவல் ஃபண்ட், தங்கம் உள்ளிட்ட பிற விலை மதிப்பு அதிகம் உள்ள உலோகத்தை காட்டிலும் வெள்ளி சிறப்பானதாக இருக்கும் என்று கூறியுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் வெள்ளி முக்கிய பங்காற்றுவதால் வெள்ளி அதிகமான அளவு தேவைப்படுகிறது. எனவேதான் கடந்த 2024 ஆம் ஆண்டில் வெள்ளியின் விலை 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.
வெள்ளி உற்பத்தியில் இந்தியா சர்வதேச அளவில் முன்னிலையில் இருக்கிறது. எனவே பொருளாதார ரீதியாக இந்தியாவை உயர்த்துவதில் வெள்ளிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையில் மின்சார வாகனங்கள்தான் ஆதிக்கம் செலுத்தும் என்று பேசப்பட்டு வருகிறது. என்னதான் அமெரிக்கா டீசல் வாகனங்களை நோக்கி மீண்டும் திரும்பினாலும் கூட, சர்வதேச அளவில் அதாவது ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது.
இதன் சந்தையும் வரும் ஆண்டில் மேலும் உயரம். மின்சார வாகன தயாரிப்பில் வெள்ளி மிக முக்கிய பங்கு வகிப்பதால் ஆட்டோமொபைல் துறையுடன் சேர்ந்து வெள்ளியின் தேவையும் அதிகரிக்கும். இயல்பாக விலையும் உயரும்.
வெள்ளியின் இயல்பே வெப்பத்தை குறைப்பதும் நீடித்து உழைக்கும் தன்மையும்தான். இவை இரண்டும் மின்சார வாகன உற்பத்திக்கு மிக முக்கியமானவை. மட்டுமல்லாது வெள்ளி, தாமிரத்தை விட மின்சாரத்தை நன்கு கடத்தும் என்பதால் வாகன உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகிறது. கார்களில் பயன்படுத்தப்படும் ஏர் பேக்குகள், தானியங்கி பிரேக் சிஸ்டம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் வெள்ளை அடிப்படையான சென்சார்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
மட்டுமல்லாது வெள்ளி மின்சார வாகனங்களில் பேட்டரிகளின் ஆற்றல் பரிமாற்ற திறனை மேம்படுத்துவதால் அதன் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. சில நவீன மின்சார கார்கள் சோலார் பேனல் வசதியுடன் வருகிறது. இந்த கார்களில் சோலார் பேனல்களை தயாரிக்க வெள்ளி மிக முக்கிய உலோகமாக பயன்படுகிறது.
எனவே வெள்ளியின் மார்க்கெட் சீக்கிரமாகவே தங்கத்தை முந்திவிடும். எனவே, நீங்களும் வெள்ளியை வாங்க தொடங்குங்கள்.