சென்னை, செப்.9 –
மாநகராட்சி தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைத்ததை எதிர்த்து, ராயபுரம் மற்றும் திருவி.கா.நகர் மண்டலத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் நீண்டநாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கொருக்குப்பேட்டை ராஜீவ் காந்தி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று மாலை சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் போலீசாருக்கும் பணியாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து போலீஸ் வாகனங்களில் அண்ணா நகர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

