சென்னை அண்ணாநகர் பகுதியில் அதிகாலையில் பிரியாணி சாப்பிட வந்த இளைஞரை வழிப்பறி செய்த இருவர், பின்னர் போலீசாரையே தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரியைச் சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன், தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அண்ணாநகர் ஸ்டீபன் சாலையில் பிரியாணி சாப்பிட வந்திருந்தார். அப்போது, ஹர்ஷித் மற்றும் சல்மான் பாஷா எனும் இருவர் அவரை திடீரென தாக்கி, செல்போன் மற்றும் ரூ.2,000 பணத்தை பறித்து தப்பி சென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தாமஸ் ஆல்வா எடிசன் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் மடக்கிப் பிடிக்க முயன்றபோது, ஒருவர் போலீசாரையே தாக்க முயன்றார். பின்னர் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால், அங்கு கொண்டுசெல்லப்பட்டதும், இருவரும் பணியில் இருந்த காவலர்களுடன் சண்டையில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் இரண்டு காவலர்கள் காயமடைந்து, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துக்கான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


