சிறையில் சொகுசு வாழ்க்கை! பிரியாணி அபிராமி வழக்கு புதிய கேள்விகளை எழுப்புகிறது

சிறையில் சொகுசு வாழ்க்கை! பிரியாணி அபிராமி வழக்கு புதிய கேள்விகளை எழுப்புகிறது

தமிழ்நாடு: “சிறையில் கடுமையான கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு முறைகளும் உள்ளன” என்பது அதிகாரிகள் கூறும் உத்தியோகபூர்வ நிலைப்பாடு. ஆனால், மீண்டும் மீண்டும் வெளிவரும் சம்பவங்கள் இந்த வார்த்தைகளை கேள்விக்குள்ளாக்குகின்றன. இப்போது, பிரியாணி அபிராமி என அழைக்கப்படும் அபிராமியின் வழக்கு, இந்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை ஊடகங்கள் மற்றும் மக்களிடையே பரப்பியுள்ளது.

பிரபலமான இந்த வழக்கில், அபிராமி சிறையில் இருந்தபோதும் சிகை அலங்காரம், முக ஒளிர்வு, நகங்கள் வரை கலர் செய்யப்பட்டிருந்ததுடன், கைமோதிரங்கள் வரை அணிந்திருந்தது. இவை எல்லாம் “சிறையில் சொகுசு வாழ்க்கை சாத்தியமா?” என்ற கேள்விக்கு நேரடி ஆதாரமாக காட்சியளிக்கின்றன.

சட்ட விரோத பொருட்கள் எப்படி நுழைகின்றன?

சிறைகளில் சட்டவிரோத பொருட்கள் வைத்திருந்ததாக பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இது அனைத்தும் சிறு அதிகாரிகள் ஒத்துழைப்புடன், உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல், பயன்படுத்திய சிறைவாசிகள் மட்டுமே வழக்கில் பதியப்படுவதாகவும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் இன்றும் பல சிறைவாசிகள் சட்டவிரோத பொருட்கள் பயன்படுத்தி வருவதாகவும், சிறையில் வாழ்ந்த சிறைவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

புழல் சிறை போன்ற உயர் பாதுகாப்பு சிறைகளில் தரமான சோதனை முறைகள் நடைமுறையில் உள்ளன. முதல் நுழைவாயிலில் நுழையும் பொழுதே, சிறைவாசிகள் நிர்வாணமாக்கி ஆசன வாயில்வரை பரிசோதனை செய்த பின்பு தான் அடுத்த இடத்திற்கு செல்ல முடியும். வாரம் ஒரு முறை அல்லது இரு முறை நடத்தப்படும் திடீர் சோதனைகளில் துணிகள் முதல், தூங்கும் இடங்கள் வரை விரித்து ஆய்வு செய்யப்படுகின்றன.

இந்த சூழ்நிலையில் செல்போன்கள், கஞ்சா போன்ற பொருட்கள் எவ்வாறு சிறைக்குள் நுழைகின்றன? யார் அனுமதிக்கின்றனர்? — இது மிகுந்த எதிர்வினையுடன் கேட்கப்படும் ஒரு பொதுக்கேள்வியாக உள்ளது.

அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமா?

இத்தகைய சொகுசு வசதிகள் அதிகாரிகள் அறியாமலா நடக்கின்றன? சிறை காவலர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இதெல்லாம் சாத்தியமில்லை என பலர் உறுதியாகக் கூறுகிறார்கள். கைதிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மிகவும் கடுமையானவை. ஆனால், பண பலமும், சமூக பலமும் கொண்டவர்கள் இந்த விதிகளை மீறி வசதிகளைப் பெறும் போது, அதிகாரிகளின் நேரடி அல்லது மறைமுக ஒத்துழைப்பே காரணமாக இருக்கலாம்.

சிறை: சீர்திருத்த மையமா? பணம் பேசும் இடமா?

சிறை என்பது குற்றவாளிகளை திருத்தும் இடமாக இருக்க வேண்டியதுதான். ஆனால், சொகுசு வசதிகளை அனுபவிக்கும் சிலரின் நிகழ்வுகள், சிறைகளை பணம் பேசும் இடமாக மாற்றியுள்ளன. இது மக்கள் நம்பிக்கையை சிதைக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையாக வளர்கிறது.

சிறை என்பது சமத்துவத்தின் அடையாளமாக செயல்பட வேண்டும். ஆனால், சமூக அந்தஸ்தும், பண பலமும் இங்கும் வேரூன்றிவிட்ட நிலையில், அது அதிகார பீடத்திற்கே சவாலாக இருக்கிறது.

சட்டம், நிர்வாகம், ஊடகம், மக்களவை என அனைவரும் இந்த உண்மைகளை மறக்காமல் சுட்டிக்காட்டி, ஒழுங்குகளை உறுதிப்படுத்த வேண்டிய நேரமிது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook