சென்னை, செப்.5 –
தமிழ் திரையுலகில் மறக்க முடியாத பங்களிப்பை செய்த கவிஞர் பூவை செங்குட்டுவன் (90) இன்று மூப்பினால் சென்னை பெரம்பூரில் காலமானார்.
பூவை செங்குட்டுவன், கடந்த பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவிற்கு ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி வழங்கியவர். அவரின் பாடல்கள் மக்களின் மனதில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன. “நான் உங்கள் வீட்டுப் பிள்ளை”, “தாயிற் சிறந்த கோவிலுமில்லை”, “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்”, “இறைவன் படைத்த உலகை” உள்ளிட்ட பல பாடல்கள் காலத்தால் அழியாத சிறப்புமிக்க படைப்புகளாக திகழ்கின்றன.
திரைப்பாடல்களை மட்டுமின்றி, கவிதைகள், சமூக சிந்தனைகளை வெளிப்படுத்திய பல படைப்புகளாலும் அவர் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார். அவரது பாடல்கள் சாதாரண மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பதுடன், இனிமையான சொற்கள் மற்றும் எளிமையான கவியிசை மூலம் அனைவரையும் கவர்ந்தன.
கவிஞர் பூவை செங்குட்டுவனின் மறைவு தமிழ் இலக்கியத்திற்கும், திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். திரையுலகினர், ரசிகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

