புதுக்கோட்டை, ஏப். 4:
மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய குடும்பத்தினரை மக்கள் சக்தி இயக்கத்தினர் பாராட்டி நிதியுதவி வழங்கினர்.
புதுக்கோட்டை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த க. பாண்டியன் (36) வண்ணம் பூசும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அறந்தாங்கி பகுதியில் வேலைக்குச் சென்றபோது தவறி கீழே விழுந்து காயமடைந்தார். முதலில் அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது குறித்து மருத்துவர்கள் குடும்பத்தினருக்கு விளக்கமளித்தனர். இதற்கு அவரது மனைவி திருமதி பா. அபிராமி சம்மதம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சட்டப்படி அறுவைச் சிகிச்சை மூலம் பாண்டியனின் கல்லீரல், கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, முன்பதிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த மனிதநேய செயலை பாராட்டும் வகையில் மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் 55-ஆவது நிகழ்வாக, புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில் வசித்து வரும் அபிராமி பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் க.சி. நீலமேகம், துணைத் தலைவர் வெ. இரா. சந்திரசேகர், துணைச் செயலர் இரா. இளங்கோ, தண்ணீர் அமைப்பு இணைச் செயலர் ஆர்.கே. ராஜா, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ. விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு குடும்பத்தினருக்கு ரூ.10,000 நிதியுதவி, டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி நூல், திருக்குறள் புத்தகம், கதர் ஆடை வழங்கி சான்றிதழ் அளித்து பாராட்டினர்.
மனிதநேய உணர்வை வெளிப்படுத்தும் இந்த உடல் உறுப்பு தானம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

