சென்னை: விரைவில் நாடாளுமன்றத்தில் Shut Up Modi என்று சொல்வோம் என திமுக எம்பி ஆ.ராசா ஆவேசமாக தெரிவித்துள்ளார். மொழியை வைத்து நாட்டை துண்டாட பார்க்கிறார்கள் என்று மோடி பேசி இருப்பதாக கூறிய ஆ.ராசா, மதத்தால் நாட்டை பிரிக்கிறீர்களே என்று நாங்கள் கேட்க மாட்டோமா என்று எதிர்க் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்றால் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இதனைக் கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பிரதமரை பார்த்து கெட் அவுட் மோடி என்போம் என்று கூறினார்.
இதற்கு மீண்டும் முடிந்தால் கெட் அவுட் மோடி என்று சொல்லி பாருங்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சவால் விடுத்தார். இதன்பின் கடந்த 2 நாட்களாக திமுக மற்றும் பாஜக கட்சிகள் சோஷியல் மீடியாவில் கடுமையாக மோதி வருகின்றனர். திமுக தரப்பில் கெட் அவுட் மோடி என்று சொல்லி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்ய, பாஜக தரப்பில் கெட் அவுட் ஸ்டாலின் என்று ட்ரெண்ட் செய்தனர்.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக எம்பி ஆ.ராசா பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி மொழியால் நாட்டை துண்டாட பார்க்கிறார்கள் என்று பேசி இருக்கிறார். எங்களோடு உணர்வில் உயிரில் தாய்மொழியாக இருக்கும் தமிழால் நாட்டை பிரிக்கிறோம் என்ற ஐயம் இருக்குமானால், ஒன்றுமே இல்லாத மொழியை வைத்து கொண்டு மதத்தால் பிரிக்கிறீர்களே என்று நாங்கள் கேட்க மாட்டோமா?
இன்னும் நீங்கள் பேசினால்.. கோபேக் மோடி என்று சொன்னோம்.. துணை முதலமைச்சர் கெட் அவுட் மோடி என்று சொன்னார். இனி நாடாளுமன்றத்தில் விரைவில் Shut Up Modi என்று சொல்வோம். அதேபோல் சமூகத்திற்கு உழைத்தவர்களில் பெரியாருக்கு முன் யாரும் இல்லையா? என்று கேட்கிறார்கள்.
பெரியாருக்கு முன் யாரெல்லாம் இருந்தார்களோ, அவர்கள் பெரியார் குறித்து என்ன சொன்னார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அம்பேத்கரும், ஜின்னாவும் இந்தி எதிர்ப்பில் ஆர்வம் காட்டியதில்லை. இருவருமே இந்தி வேண்டுமென்று விரும்பியவர்கள். அம்பேத்கர் இந்திய துணைக் கண்டத்தில் சாதி ஒழிய வேண்டும், தலித் விடுதலை வேண்டும் என்று விரும்பினார்.
அதற்காக வலிமையான மத்திய அரசு வேண்டும் என்றார். ஆனால் பெரியார் தனித் தமிழ்நாடு கேட்டதற்கு காரணமே சாதி ஒழிந்த தனித் தமிழ்நாடு வேண்டும் என்பதற்காகதான். பெரியார், அம்பேத்கர் இருவருக்கும் சாதி ஒழிப்பில் பொதுக் கருத்து இருந்தது. ஆனால் மொழி உணர்வில் வேறு கருத்து. அவர் இந்தி வேண்டுமென்றார். பெரியார் இந்தி வேண்டாம் என்றதாக தெரிவித்தார்.