சென்னை, ஆக.31 –
சென்னை மணலியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர், மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் “மக்களை தேடி மருத்துவம்” திட்டம் ஏற்கனவே 2 கோடி பயனாளிகளை சென்றடைந்துள்ளதாகவும், இதற்காக ஐக்கிய மன்றம் விருதும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிய “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த 3 வாரங்களில் நடந்த 112 முகாம்களின் மூலம் 1,48,290 பேர் பயனடைந்துள்ளனர். நேற்று முதல் 4வது வாரமாக அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் இந்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இம்முகாம்களில் எலும்பியல், நரம்பியல், இருதய நோய், மகப்பேறு உள்ளிட்ட 7 சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி மருத்துவச் சான்றிதழ்களையும் காப்பீட்டு அட்டைகளையும் பெற்றுச் செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் முழுமையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

