படிப்போம் பகிர்வோம் நிகழ்வில்  சோழ நாட்டு நடு கற்கள் நூல் குறித்த சிறப்பு சொற்பொழிவு

படிப்போம் பகிர்வோம் நிகழ்வில் சோழ நாட்டு நடு கற்கள் நூல் குறித்த சிறப்பு சொற்பொழிவு

திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து படிப்போம் பகிர்வோம் நிகழ்வில் சோழ நாட்டு நடு கற்கள் நூல்குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியினை நடத்தியது. திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். நூலக பணியாளர் மீனாட்சி சுந்தரம் துவக்க உரையாற்றினார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் , லட்சுமி நாராயணன்,சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், வரலாற்று ஆசிரியர் அரிஸ்டோ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வரலாற்று ஆசிரியர் அரிஸ்டோ சோழ நாட்டு நடு கற்கள். நூல் குறித்து படிப்போம் பகிர்வோம் நிகழ்வில் பேசுகையில்,நடுகல் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக் கல் ஆகும். இவற்றை “வீரக் கற்கள்” என்றும் கூறுவர். நினைவுக் கற்கள் எடுக்கும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கோ, ஒரு பிரதேசத்துக்கோ அல்லது தனிப்பட்ட பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ உரிய வழக்கம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும் பெருங்கற்காலம் முதலே இவ்வழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தியாவிலும் வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாகவே நடுகற்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. இறந்தவர் எவருக்குமே நடுகற்கள் எடுக்கப்படலாமாயினும், வீரச்சாவு அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்பு கொடுக்கப்பட்டு வந்தது. வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக் கற்களை மக்கள் வணங்கி வந்தமை பற்றியும் பண்டைக்கால இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.தமிழ் நாட்டில் நடுகல் எடுக்கும் வழக்கம் மிகப் பழங்காலம் முதலே இருந்துள்ளமை, தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இது தவிர சங்கப் பாடல்களிலும், பின்னர் எழுதப்பட்ட நூல்களிலும் நடுகற்கள் பற்றிய தகவல்கள் உள்ளன.

அவ்வகையில் சோழ நாட்டு நடுகற்கள் மன்னு பெரும் முன்னோர் மரபு நூல் சோழமண்டலம் அல்லது சோழநாடு என்று பொதுவாக ஆய்வாளர்கள் குறித்துள்ளவற்றின் அடிப்படையில் சோழமண்டலம் என்ற கருத தக்க சோழ நாட்டை சேர்ந்தவை என்று தற்போதுள்ள மாவட்ட பிரிவுகளில் தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தென்னார்க்காடு , விழுப்புரம் ,பாண்டிச்சேரி, சேலம் உள்ள இடங்களில் உள்ள நடு கற்களை நீண்ட நெடிய பாரம்பரியத்தை கொண்ட நடு கல் வழிபாட்டின் எச்சங்கள் பற்றியும் அவற்றின் வரலாற்று சிறப்புகளையும் வழிபடு முறைகளையும் தொகுத்ததோடு அத்தனை ஊர்களுக்கும் நேரே சென்று கள ஆய்வு மேற்கொண்டு அவற்றை பதிவு செய்ததோடு மட்டுமின்றி வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாக நவீன தொழில்நுட்பத்தை புகுத்தி கியூ ஆர் கோடு மற்றும் கூகுள் மேப் குறியீட்டை பயன்படுத்தி சோழ நாட்டு நடு கற்கள் நூலினை வெளியிட்டுள்ளார். மனிதராய் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து தன் பொருட்டு இறந்து விடாமல் ஓர் உயரிய செயலுக்காய் பிறருக்காக தன் இன்னுயிரை மாய்த்த வீரர்களுக்கு வைத்த நடுகல் குறித்து எடுத்துரைத்துள்ளது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது. வருங்கால சந்ததியினர் ஒவ்வொருவரும் நல்ல நூல்களைப் படித்தறிந்து கற்றதை பிறருக்கு கற்பிக்க வேண்டும் என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook